சென்னையில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய 13 வயது சிறுமியையும், அவரின் 8 வயது தங்கையையும் கடத்தி சென்றதாக கல்லூரி மாணவனை கோட்டூர்புரம் போலீசார் கைது செய்ய திருநங்கை உதவியால் மீட்கப்பட்டனர்.
சென்னை கோட்டூர்புரம் பகுதியில் டென்டல் லேப் நடத்தி வருபவரின் 13 வயதில் மகள் தனியார் பள்ளியொன்றில் 8-ம் வகுப்பு படிக்கிறார். இந்த சிறுமியுடன் சித்தப்பா மகளான 3-வது படிக்கும் 8 வயது சிறுமியும் காணவில்லை என்று நேற்று மாலை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர்.
வீட்டில் சோதனை செய்த போது, சிறுமி எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அதில், தனக்கு நுரையீரல் பிரச்சனை இருந்து வருவதால் தனது பெற்றோர் சிகிச்சைக்காக அதிக செலவு செய்கின்றனர். பெற்றோர்களுக்கு மேலும் மேலும் செலவு வைக்க விரும்பவில்லை என்று 13 வயது சிறுமி கூறியிருந்தார். அதே கடிதத்தில் 8 வயது சிறுமி, தனது தங்கையை மட்டுமே பெற்றோர் நன்கு கவனிக்கின்றனர். தன்னை கண்டுகொள்வதே இல்லை என்று எழுதியிருந்தார். வீட்டை விட்டு வெளியேறிய இருவரும் செல்போனையும் உடன் எடுத்து செனற்றிருந்தனர். ஆனால், செல்போனே சுவிட்ச் ஆப் செய்து வைத்திருந்ததால் ட்ரேஸ் செய்ய முடியவில்லை.
எனினும், சிறுமி வைத்திருந்த செல்போன் வாட்ஸ் அப்பிற்கு சிறுமிகளின் தந்தை அழுது கொண்டே , 'நீங்கள் காணாமல் போனதால் அம்மா உடல் நலம் சரியில்லாமல் இருக்கிறார். உடனடியாக , திரும்பி வந்துவிடும் படி கெஞ்சி பேசிய குரல் பதிவை போலீசார் அனுப்பினர். இந்த நிலையில், இரவு 10.30 மணியளவில் காட்டாங்கொளத்தூர் பாண்டியன் எக்ஸ்பிரஸ் விரைவு ரயிலில் சென்று கொண்டிருந்த சிறுமிகள், செல்போனை ஆன் செய்துள்ளனர். வாட்ஸ் அப்பில் பெற்றோர் அழும் குரல் பதிவை கேட்டு 13 வயது சிறுமி கண்ணீர் விட தொடங்கியுள்ளார். சகோதரி அழுவதை பார்த்து 8 வயது சிறுமியும் அழுதுள்ளார். இந்த சமயத்தில் ரயிலில் இருந்த திருநங்கை ஒருவர் இதை கவனித்துள்ளார். சிறுமிகளுடன் இளைஞர் ஒருவரும் இருந்ததை கண்டு விசாரிக்க தொடங்கினார்.
அப்போது. 8 வயது சிறுமி தங்கள் வீடு கோட்டூர்புரத்தில் இருப்பதாகவும் தனது சகோதரியுடன் வந்துவிட்ட விவரத்தை அழுது கொண்டே திருநங்கையிடம் கூறியுள்ளார். சுதாரித்துக் கொண்ட திருநங்கை உடனடியாக டி.டி.ஆரை அழைத்து விவரத்தைச் கூற , அவர் காவல் கட்டுப்பாட்டு அறை மூலம் கோட்டூர்புரம் காவல் நிலையத்துக்கு தெரிவித்தார்.
சிறுமிகளையும், உடன் வந்த இளைஞரையும் அடுத்த நிலையத்தில் ஒப்படைக்க போலீசார் உத்தரவிட்டனர். தொடர்ந்து , விழுப்புரம் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசாரிடத்தில் சிறுமிகள் மற்றும் அந்த இளைஞரை ஒப்படைத்தனர். இதையடுத்து, சிறுமிகளின் பெற்றோருடன் சென்ற கோட்டூர்புரம் போலீசார் அவர்களை மீட்டனர்.
சிறுமிகளை அழைத்துச் சென்ற இளைஞர் வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் சூர்யபிரகாஷ்(19) என்பதும் இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து வரும் சூர்ய பிரகாசுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் 13 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியதும் தெரிய வந்தது.
தொடர்ந்து, சூர்ய பிரகாஷ் , இரண்டு சிறுமிகளையும் அழைத்துக் கொண்டு ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு செல்ல முடிவு செய்தார். தொடர்ந்து கல்லூரி மாணவன் சூர்ய பிரகாஷ் இரண்டு சிறுமிகளையும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் அழைத்துச் செல்லும் போது, திருநங்கை கண்ணில் பட்டுள்ளார். திருநங்கை கொடுத்த தகவலால் 6 மணி நேரத்தில் சிறுமிகளை போலீசார் மீட்டனர். கல்லூரி மாணவன் சூர்ய பிரகாஷ் மீது கடத்தல் வழக்கு பதிவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.