சென்னையில் நள்ளிரவில் போதையில் கார் ஓட்டிய டாக்டரிடத்தில் இருந்து போலீஸார் காரை பறிமுதல் செய்த ஆத்திரத்தில் போலீஸ் ரோந்து வாகனத்தை கடத்திய டாக்டரை போலீஸார் கைது செய்தனர்.
அரக்கோணம் அருகேயுள்ள சால்பேட்டை, டவுன்ஹால் தெருவைச் சேர்ந்தவர் டாக்டர் முத்து விக்னேஷ்(31). இவர் எம்.பி.பி.எஸ், எம்.டி படித்துவிட்டு குன்றத்தூரில் உள்ள மாதா மருத்துவமனையில் மருத்துவராகவும், பேராசிரியராகவும் பணிபுரிந்து வருகிறார். மருத்துவர் முத்து விக்னேஷ் நண்பர்களுடன் விருந்தில் கலந்து கொண்டு விட்டு, நேற்றிரவு 1.30 மணியளவில் சேத்துபட்டு ஹாரிங்டன் சாலை சந்திப்பில் தன் காரில் வந்துக்கொண்டிருந்தார். வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் சிவசங்கரன், காவலர் சுந்தர் முத்துகணேசின் காரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.
மருத்துவர் முத்து விக்னேஷ் மது போதையில் வாகனம் ஓட்டி வந்தது தெரிய வரவே, வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்துள்ளனர். அவரின் காரையும் பறிமுதல் செய்துள்ளனர். மதுபோதையில், போக்குவரத்து போலீசாருடன் நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட முத்து விக்னேஷ் கோபமாக அங்கிருந்து நடந்து சென்றுவிட்டார். பின்னர் , முத்து விக்னேஷ் கீழ்பாக்கம் ஈகா சிக்னல் அருகே சென்ற போது தனது வாகனத்தை பறிமுதல் செய்த போக்குவரத்து உதவி ஆய்வாளரும், காவலரும் சாலையில் சாலை ஜீப்ரா கோடு வரைந்து கொண்டிருப்பதை பார்த்தார்.
தனது காரை பறிமுதல் செய்து அபராதம் விதித்த போக்குவரத்து போலீசாரை கண்டதும் அவர்களை பழிவாங்குவதற்காக சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீஸ் வாகனத்திலிருந்த டேஷ் போர்டில் வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்தார். பின்னர், கண்ணிமைக்கும் நேரத்தில் போலீசாரின் ரோந்து வாகனத்தை ஓட்டி சென்று விட்டார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அங்கு வந்த இரு சக்கர வாகன ஓட்டி ஒருவரின் உதவியுடன் ரோந்து வாகனத்தை துரத்தினர்.
விக்னேஷ் கெங்கி ரெட்டி சுரங்க பாதை அருகே சென்ற போது, முத்து விக்னேஷ் போலீஸ் ரோந்து வாகனத்தை அதி வேகமாக இயககினார். அதனால், எதிரே வந்த ஆட்டோவின் மீது மோதி உள்ளார். ஆட்டோவில் பயணம் செய்த மூன்று பேருக்கு லேசான காயம் ஏற்பட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மருத்துவரை மடக்கிப் பிடித்த போலீசார் அவரிடம் ரோந்து வாகனத்தை கைப்பற்றினர். இந்த சம்பவம் குறித்து கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. தொடர்ந்து, போலீசார் வாகனத்தை கடத்தியது, ஆபாசமாக பேசுதல், போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தல் ஆகிய பிரிவுகளில் மருத்துவர் முத்து விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்தனர். கீழ்பாக்கம் போலீசார் அவரை கைது செய்து மருத்துவர் முத்து விக்னேஷை சிறையில் அடைத்தனர்.