தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் சனிப்பெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெற்றது.
குச்சனூர்:
தேனி மாவட்டம் குச்சனூரில் உள்ள சனீஸ்வர பகவான் ஆலயத்தில், சனிபெயர்ச்சியை முன்னிட்டு சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கும்பகோணம்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருநாரையூர் ராமநாத சுவாமி ஆலயத்தில் சனிபெயர்ச்சியை யொட்டி மங்கள சனீஸ்வரருக்கு மஞ்சள், சந்தனம் ,பால், தயிர், உள்ளிட்ட பலவகை மங்கல பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்றன.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஏரிகுப்பம் பகுதியில் உள்ள எந்திர வடிவிலான சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபஆராதனை நடைபெற்றது.
குடவாசல்:
திருவாரூர் மாவட்டம் குடவாசல் திருக்கொடியலூர் அகத்தீஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள மங்கள சனீஸ்வரருக்கு சிறப்பு பரிகார யாகங்கள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் சனி பகவானுக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
மண்ணச்சநல்லூர்:
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார் கோவில் திருக்கரம்பனூரில் அமைந்துள்ள உத்தமர் கோவிலில் சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.
சின்னமனூர்:
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே சபரி நதிக்கரையில் அமைந்துள்ள குச்சனூர் சுயம்பு சனீஸ்வரன் கோயிலில் சனிப்பெயர்ச்சியையொட்டி அதிகாலையிலேயே சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. அதிகாலை 3 மணிக்கு வேதிகார்ச்சனையும், 5.22 மணிக்கு மூலவருக்கு மகா தீபாராதனையும், உற்சவருக்கு அபிஷேக அலங்காரமும் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தில் உள்ள சனீஸ்வர பகவானுக்கு பால், பஞ்சாமிர்தம், பன்னீர், தேன் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிசேகங்களும், அதைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் மற்றும் யாகவேள்வியும் நடைபெற்றது. இதன்பின்னர் சனி பகவானுக்கு வெள்ளி காப்பு மற்றும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக குறைவான பக்தர்களே கோயிலில் அனுமதிக்கப்பட்டனர்.