நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாக ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ரஜினியின் ரத்தம் அழுத்தம் இன்னும் அதிகமாகவே இருப்பதாகவும், இருப்பினும் நேற்றைய நிலையுடன் ஒப்பிடும்போது கட்டுக்குள் இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், ரஜினியின் உடல்நிலையில் எச்சரிக்கத்தக்க வகையில் எந்த பாதிப்பும் இல்லை என்றும், இன்று மேலும் சில பரிசோதனைகள் அவருக்கு மேற்கொள்ளப்பட்டு மாலை முடிவுகள் தெரியவரும் என அப்போலோ மருத்துவமனை கூறியுள்ளது.
ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த ரஜினிக்கு கவனமாக மருந்துகள் கொடுக்கப்பட்டு வருவதாகவும், தொடர்ந்து அவர் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரத்த அழுத்தத்தில் மாறுபாடுகள் ஏற்படக் கூடும் என்பதால், முழுஓய்வில் இருக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், அவரைச் சந்திக்க பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்றும் அப்போலோ திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
பரிசோதனை முடிவுகள் மற்றும் ரத்தம் அழுத்தம் கட்டுக்குள் வருவதன் அடிப்படையில், ரஜினியை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து இன்று மாலை முடிவெடுக்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ரஜினிகாந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். ரஜினி விரைவில் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்த், விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப பிரார்த்திப்பதாக, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் ரஜினியிடம் தொலைபேசியில் பேசியதாகவும், 2 நாட்களில் வீடு திரும்புவேன் என அவர் தெரிவித்ததாகவும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறியுள்ளார்.