இந்தியாவில் கொரோனா பரவ தொடங்கிய மார்ச் மாதத்தில் பலருக்குள்ளும் ஒரு அச்சம் எழுந்தது. ஐயோ... இந்தியாவிலேயே அதிக மக்கள் நெருக்கம் நிறைந்த தாராவி குடிசைப்பபகுதியில் என்ன நடக்குமோ என்கிற அச்சம்தான் அது, ஆனால், இன்று ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லாத பகுதியாக தாராவி மாறி காட்டியிருக்கிறது.
மும்பை நகரின் மத்திய பகுதியில் தாராவி என்ற குடிசைப்பகுதி அமைந்துள்ளது. மும்பை நகரத்தையும் புறநகரையும் இணைக்கும் பகுதியில் உள்ள தாராவியில் லட்சக்கணக்கான தமிழர்கள் வசிக்கின்றனர். இதனால், தாராவியை குட்டித் தமிழ்நாடு என்றே சொல்வார்கள். குறிப்பாக நெல்லை , தூத்துக்குடி , சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழர்கள் இங்கு அதிகளவில் வசிக்கின்றனர். இவர்களுடன் சேர்ந்து மராட்டியர்கள், வட இந்தியர்கள், கேரள மக்களும் தாராவியில் வசிக்கின்றனர்.
இந்தியாவில், மக்கள் நெருக்கடி மிகுந்த நகரம் மும்பை என்றால், இந்த நகரின் மத்தியில் அமைந்திருக்கும் தாராவி, மும்பையிலேயே அதிக நெருக்கடி மிகுந்த... குடிசைகள் நிறைந்த பகுதி. நாயகன், காலா, ஸ்லம்டாக் மில்லியனர், கல்லிபாய் என்று தாராவியைக் காட்சிப்படுத்தியிருக்கும் படங்களும் உண்டு. ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு 2.27 லட்சம் மக்கள் இங்கே வசிக்கின்றனர். அது மட்டுமல்ல, இந்த தாராவிக்குள் 5,000 ஜி.எஸ்.டி வரி செலுத்தும் சிறிய தொழில் நிறுவனங்களும் அமைந்துள்ளன. ஆண்டுக்கு ரூ. 7,500 கோடி வர்த்தகம் தாராவில் நடைபெறுகிறது.
இதற்கு முன்னதாக, தாராவியில் பிளேக் நோயால் ஏராளமான மக்கள் இறந்து போயிருக்கிறார்கள். காலரா, டைஃபாய்ட், போலியோ போன்ற நோய்களிலும் ஏரானமான மக்கள் பலியாகியுள்ளனர். கடந்த 1986-ம் ஆண்டு காலரா தாக்கியபோது தாராவியில் ஏராளமான குழந்தைகள் பரிதாபமாக இறந்து போனார்கள். இந்த நிலையில்தான் உலகையே மிரட்டி வந்த கொரோனா கடந்த ஏப்ரல் மாதத்தில் கொரோனா நுழைந்தது. மக்கள் நெருக்கம் அதிகமென்பதால், இங்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் மகாராஷ்ட்ர அரசிடத்தில் தொற்றிக் கொண்டது. காரணம்... தாராவியில் 80 சதவிகித மக்கள் பொது கழிவறையை பயன்படுத்தி வருகின்றனர். 450 பொது கழிவறைகள் தாராவி மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 10- க்கு 10 அறைக்குள் 8 அல்லது 10 பேர் வரை வாழ்ந்தனர்.
இதனால், பெரும் அச்சம் ஏற்பட்டாலும் மத்திய , மாநில அரசுகள் தாராவியை கண்கொத்தி பாம்பாக கண்காணித்தன. மும்பை மாநகராட்சி தனியார் நிறுவனங்களுடன் கை கோத்து தாராவி முழுவதும் பரிசோதனைகளை தீவிரப்படுத்தியது. தாராவி மக்களுக்காக 200 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை 14 நாள்களில் உருவாக்கப்பட்டது. 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர் . ஸ்கிரீனிங், டெஸ்டிங், ட்ரீட்மென்ட் என்ற மந்திரத்தை மும்பை மாநகராட்சி கையில் எடுத்தது. மக்களுக்கு சுகாதாரமான உணவு கிடைக்க ஆங்காங்கே கம்யூனிட்டி கிச்சன்கள் உருவாக்கப்பட்டன. மும்பை மாநகராட்சி எடுத்த பெரும் முயற்சி காரணமாக தாராவியில் கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைக்கப்பட்டது. இதனால், ரத்த வெறியுடன் தாராவிக்குள் நுழைந்த கொரோனாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
தற்போதைய நிலவரப்படி தாராவியில் 3 ஆயிரத்து 788 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, 3 ஆயிரத்து 460 பேர் குணமடைந்துள்ளனர். ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்து முதன்முறையக டிசம்பர் 26 - ஆம் தேதி யாருக்கும் தொற்று பரவவில்லை என்கிற நிலை தற்போது தாராவியில் உருவாகியுள்ளது.