வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தமிழகம் முழுவதுமுள்ள வைணவ ஆலயங்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு கோலாகலமாக அரங்கேறியது.
மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினோராம் நாள் வைகுண்ட ஏகாதசி எனக் கொண்டாடப்படுகிறது. திருமாலின் இருப்பிடமாகக் கருதும் வைகுண்டத்தின் கதவுகள் இன்று திறக்கப்படுவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
சிதம்பரம் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சயன கோலத்தில் காட்சியளித்த பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
108 திவ்யதேசங்களில் 19வது திவ்ய தேசமாக விளங்கும் நாகப்பட்டினம் சௌந்தரராஜ பெருமாள் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் அடுத்த திருமலைராயன்பட்டினம் வீழிவரதராஜப் பெருமாள் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.