கிராம நிர்வாக அலுவலரை மண் அள்ளும் சட்டியால் தாக்க முயன்ற மணல் திருடன், தானே கீழே விழுந்து காயமடைந்தார்.
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் தாலுகா சுரண்டை அருகேயுள்ள ஆனைகுளம் கிராமத்தில் வடக்குவாச்சி அம்மன் கோவிலுக்கு கீழ்ப்புறத்தில் உள்ள ஓடையில் மணல் அள்ளுவதாக கிராம நிர்வாக அலுவலர் வெள்ளைபாண்டிக்கு தொலைபேசியில் தகவல் வந்தது. புகாரைத் தொடர்ந்து ஆனை குளம் கிராம நிர்வாக அலுவலர் வெள்ளை பாண்டி தன் உதவியாளருடன் சம்பவ இடத்துக்க சென்றார். அப்போது, குலையநேரி கிராமத்தை சேர்ந்த முருகன் அவரின் மனைவி சித்திரைக்கனி ஆகியோர் ஓடையில் சிவதாசன் என்பவருக்கு சொந்தமான டிராக்டரில் மண் அள்ளிக் கொண்டிருந்தனர்.
வெள்ளை பாண்டி விசாரித்த போது, மது போதையில் இருந்த முருகன், சிவதாசன் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் வெள்ளை பாண்டியை மண் சட்டியால் தாக்க ஒருவர் ஓடினார். வெள்ளை பாண்டி நகர்ந்து கொள்ள போதையில் இருந்தவர் தானே தடுமாறி கீழே விழுந்தவருக்கு கையில் அடிபட்டதால் அழத் தொடங்கினார். பின்னர் , வெள்ளை பாண்டியை தாக்க முயன்ற இருவரும் அரை போதையில் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இது தொடர்பாக, வீரகேரளம்புதூர் வருவாய் வட்டாட்சியர் அறிவுரைப்படி சேர்ந்தமரம் காவல்நிலையத்தில் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்து காவல்நிலையத்துக்க கொண்டு சென்றனர். மணல் அள்ளியவர்களை தேடி வருகின்றனர்.