காமராஜர் ஆட்சி காலத்தில் பெரம்பலூர் அருகேயுள்ள வெங்கலம் தொகுதி எம்.எல். ஏ- வாக இருந்த மணி வயது முதிர்வு காரணமாக மரணமடைந்தார்.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், கொட்டரை அருகேயுள்ள ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்லமுத்து- பழனியம்மாள் தம்பதியின் மகன் மணி( வயது 83) இவர், கடந்த 1962ம் ஆண்டு முதல், 1967ம் ஆண்டு வரை காமராஜர் அரசியல் காலத்தில், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில் வெங்கலம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல். ஏ- வாக இருந்தார். மிக எளிமையான மனிதரான இவர், தன் தொகுதியில் ஏராளமான நற்பணிகளை மேற்கொண்டு மக்களின் நன்மதிப்பை பெற்றவர்.
இவருக்கு கருப்பாயி என்ற மனைவியும் இளங்கோவன், முத்துசாமி 2 மகன்களும் குணசுந்தரி என்ற மகளும் உண்டு. இதில், மகன்கள் இருவரும் சென்னையில் உள்ள ஹொட்டல்களில் கூலித் தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். மகள் குணசுந்தரி அங்கன்வாடியில் உதவியளராக பணிபுரிகிறார். எம்.எல்.ஏ- வாக இருந்தாலும் மக்கள் பணியில் மட்டுமே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மணி தனக்கென்று எதுவும் சேர்த்துக் கொள்ளவில்லை.
கடைசி வரை மேற் கூரை கூட சரியாக வேயாத வீட்டில்தான் வசித்தார். கடந்த 20 நாள்களுக்கு முன் முன்னாள் எம்.எல்.ஏ மணியின் மனைவி கருப்பாயி இறந்து போனார். மனைவி மீது மிகுந்த அன்பு கொண்டிருந்த மணி மிகுந்த சோகத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால், உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்து போனார்.
மறைந்த எம்.எல்.ஏ உடலுக்கு, உறவினர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் உட்பட ஏராளமானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். மறைந்த அவரின் உடல் மீது தி.மு.க கரை வேட்டி அணிவித்து முரசொலி நாளிதழ் வைத்து இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன.