மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் நிதி நிறுவனம் நடத்தி 40 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் தம்பதி உட்பட 3 பேரைக் கைது செய்துள்ள காவல்துறையினர், மேலும் 7 பேரைத் தேடி வருகின்றனர்.
உத்தமபாளையத்தைச் சேர்ந்த உதயம் பைனான்ஸ் நிறுவனத்தில் மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பணத்தை முதலீடு செய்ததுடன், ஏலச் சீட்டிலும் சேர்ந்தனர்.
சில மாதங்களுக்கு முன் அந்த நிறுவனம் மூடப்பட்டதால் அதில் பணம் கட்டிய 550 பேர் திண்டுக்கல் பொருளாதாரக் குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்ததில் மொத்தம் 40 கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து உத்தமபாளையம் தர்விஸ் அக்தர், அவர் மனைவி ரம்சியா பானு, கோம்பையைச் சேர்ந்த கருப்பசாமி ஆகிய மூவரைக் கைது செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.