எம்ஜிஆரின் நினைவுநாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள், எம்.ஜி.ஆர்.புகழை யாரும் தட்டிப்பறிக்க விடமாட்டோம் என உறுதிமொழி ஏற்றனர்.
அதிமுக நிறுவனரும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆரின் 33ஆவது நினைவுநாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, தனது இல்லத்தில், எம்ஜிஆர் புகைப்படத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து சென்னை மெரீனாவில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள், மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து அனைவரும் எம்ஜிஆர் நினைவுநாள் உறுதிமொழி ஏற்றனர். எம்.ஜி.ஆர்.புகழை யாரும் தட்டிப்பறிக்க விடமாட்டோம், சிங்கமென தேர்தல் களத்தில் சீறி பாய்வோம், சிறு நரிகளை மிரண்டு ஓடச் செய்வோம், எதிரிகளின் பொய் முகத்தை மக்களுக்கு காட்டுவோம், மீண்டும் அதிமுக ஆட்சியமைக்க சபதமேற்போம் என வாக்குறுதி எடுத்துக் கொண்டனர்.