ஆழிப்பேரலை மற்றும் புயலின் கோரதாண்டவத்துக்கு இரையாகி, இன்று அதன் மிச்ச சொச்சங்களுடன் நினைவுச் சின்னமாக மட்டும் காட்சிதரும், துறைமுக நகரான தனுஷ்கோடி அழிந்து 56 ஆண்டுகள் ஆகிவிட்டன.
இந்திய நாட்டின் கிழக்கு எல்லைகளில் ஒன்று தனுஷ்கோடி. ராமனின் கையில் இருக்கும் வில்லைப் போன்ற தோற்றம் கொண்ட நிலப்பரப்பாதலால், இதற்கு ‘தனுஷ்கோடி’ என்று பெயர் வந்ததாகக் கூறுகிறார்கள்.
56 ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பாகக் காணப்பட்ட துறைமுக நகரம் தனுஷ்கோடி. இடிந்து போன ஒன்றிரண்டு கட்டடங்களைத் தவிர தனுஷ்கோடி என்று சொல்லிக்கொள்வதற்கு எந்த அடையாளமும் இப்போது இல்லை. எனவே தனுஷ்கோடி, மனிதர்கள் வாழத் தகுதியற்ற பகுதியாகக் கருதப்படுகிறது. அதற்குக் காரணம் 1964 - ம் ஆண்டு ஏற்பட்ட கோரப்புயல் மற்றும் ஆழிப் பேரலை தான்.
1964 - ம் ஆண்டு டிசம்பர் 17 - ம் தேதி தெற்கு அந்தமான் அருகே உருவான புயல், மணிக்கு 400 - 550 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்து இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வவுனியாவைத் தாக்கியது. பிறகு, பாக்ஜலசந்தியில் மையம் கொண்டு 23 - ம் தேதி அதிகாலை தனுஷ்கோடியைத் தாக்கியது. மணிக்கு 250 கி.மீ வேகத்தில் காற்று வீசி கனமழை பெய்தது. இந்தப் புயல் தங்கள் வாழ்க்கையைப் புரட்டிப்போடும் என்று அப்போது யாரும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள். இதில், பாம்பன்-தனுஷ்கோடி இடையிலான பயணிகள் ரயிலும் ஒன்று.
அப்போது தனுஷ்கோடிக்கும் இலங்கையின் தலை மன்னாருக்கும் இடையே படகு போக்குவரத்து இருந்தது. இலங்கை செல்ல நினைப்பவர்கள் தனுஷ்கோடி வரை ரயிலில் வந்து பிறகு படகில் பயணிப்பர். சுற்றுலாப் பயணிகளால் தனுஷ்கோடி ரயில் எப்போதும் நிரம்பியே காணப்படும். அதே போன்று பயணிகள் ரயில் பாம்பனிலிருந்து தனுஷ்கோடிக்குச் சென்றுகொண்டிருந்தது. அப்போது எழுந்த ஆழிப் பேரலை ரயிலைத் தாக்கி பெட்டிகளைக் கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதில், 115 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தக் கோரத் தாண்டவம் அரசு நிர்வாகத்துக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு தான் தெரியவந்தது. இதில், குஜராத்திலிருந்து ராமேஸ்வரத்துக்குச் சுற்றுலா வந்த மருத்துவத்துறை மாணவர்கள் 40 பேரும் உயிரிழந்தனர்.
தொடர்ந்து வீசிய புயலில் தனுஷ்கோடி நகரமே உருக்குலைந்தது. ரயில்நிலையம், அஞ்சலகம், கோயில்கள், தேவாலயம், அரசு அலுவலகங்கள் என்று ஒன்றுகூட புயலுக்குத் தப்பவில்லை. பிரமாண்ட கட்டிடங்களே அழிந்த நிலையில், மீனவர்களின் குடில்கள் என்னவாயிக்கும் என்று நினைத்துப் பாருங்கள். சுமார் 5 மீட்டர் உயரத்துக்குக் கடல் நீர் மற்றும் மணல் திட்டுகளால் தனுஷ்கோடி நகரமே மூழ்கடிக்கப்பட்டது. இந்தப் புயலில் சுமார் 1800 க்கும் மேற்பட்டவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தந்தி மற்றும் டெலிபோன் கம்பங்கள் சாய்ந்து விட்டதால் வெளி உலகத்துக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே இருந்த தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டன. இதனால், சேதாரத்தின் விவரங்களும் உடனடியாக சென்னைக்கு வந்து சேரவில்லை. தகவல் கிடைத்ததும் கப்பல்கள், இயந்திர படகுகள், ஹெலிகாப்டர்கள் விரைந்தன. உணவுப் பொட்டலம் போடப்பட்டன. பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது.
இதையடுத்து அரசு, தனுஷ்கோடி பகுதியை மனிதர்கள் வாழத் தகுதியற்ற பகுதியாக அறிவித்தது. தனுஷ்கோடியில் வசித்த மக்களுக்காக புதிய வாழ்விடங்கள் உருவாக்கப்பட்டு அங்குக் குடியமர்த்தப்பட்டனர்.
அரை நூற்றாண்டுகள் கடந்து விட்ட நிலையிலும், தனுஷ்கோடியில் மின்சாரம், குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதியும் இப்போதும் கிடையாது. சுற்றுலாப் பயணிகள் மட்டும் அனுமதிக்கபடுகிறார்கள்.
தனுஷ்கோடி கடலை, தாலாட்டும் தாய் மடியாகக் கருதும் மீனவர்கள் மட்டும் அந்த மணற்குன்றுகளுக்கு மத்தியில் வாழ்வதையே சுகமாகக் கருதி, அரைநூற்றாண்டுக்கும் மேற்பட்ட சோகத்தை நெஞ்சில் சுமந்து வாழ்ந்துவருகிறார்கள்..!