தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய வகையிலான விடைத்தாளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
விடைத்தாளில் பதில்களை தெரிவிக்க ஏ, பி, சி, டி என 4 பிரிவுகள் கொடுக்கப்பட்டு இருக்கும். அதில் ஏதாவது ஒரு விடையை தேர்வு செய்ய வேண்டும். தற்போது கூடுதலாக ஒரு பிரிவு அதில் இணைக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட வினாவுக்கு பதில் தெரியவில்லை என்றால், அந்த பிரிவை தேர்வர்கள் தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறாக பதிலளித்து முடிந்ததும், ஏ, பி, சி, டி மற்றும் கூடுதலாக உருவாக்கப்பட்ட இ பிரிவில் எத்தனை விடைகள் எழுதப்பட்டன என்பதை கணக்கிட்டு அதற்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் குறிப்பிட வேண்டும்.
பின்னர், இடதுவிரல் ரேகையை அதில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக தேர்வு நேரத்தில் இருந்து கூடுதலாக 15 நிமிடம் தேர்வர்களுக்கு வழங்கப்படுகிறது. கணக்கிடுவதில் ஏதாவது பிழை இருக்கும்பட்சத்தில் 5 மதிப்பெண் குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.