சின்னாளபட்டி அருகே கருந்தேள் கடித்து பிளஸ் 1 மாணவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ந்நியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி அருகேயுள்ள பெருமாள்கோவில்பட்டி ரெங்கசாமி புரத்தை சேர்ந்தவர் சேவியர், இவருக்கு அமுதா என்ற மனைவியும் ஒரு மகளும் மகனும் உள்ளனர். சேவியர் சேலத்தில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். மகள், பெங்களூரில் தங்கி பி.எஸ்.சி. படித்து வரும் நிலையில் அமுதா மட்டும் மகன் ஆண்டனி பிரபாகரனுடன் ரங்கசாமிபுரத்தில் வசித்து வருகிறார். சின்னாளபட்டி அருகேயுள்ள வெள்ளோடு பகுதியில் பள்ளியில் ஆண்டனி பிரபாகரன் பிளஸ் 1 படித்து வந்தார்.
தொடர் , மழை காரணமாக அமுதாவின் வீட்டை சுற்றியிருந்த புதர்களில் இருந்து விஷ ஐந்துகள் ஏராளமாக வெளியேறி வீட்டை சுற்றி நடமாடி வந்துள்ளன. இந்நிலையில், நேற்றிரவு அமுதா மற்றும் ஆண்டனி பிரபாகரன் வீட்டுக்குள் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, வீட்டுக்குள் வந்த கருந்தேள் ஒன்று ஆண்டனி பிரபாகரனை கொட்டியுள்ளது. இதில், அலறியடித்து எழுந்த ஆண்டனி பிரபாகரன் வலியால் துடித்தார்.
மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், சிகிச்சை பலனளிக்காமல் ஆண்டனி பிரபாகரன் இன்று காலை பரிதாபமாக இறந்து போனார். பலியான மாணவனின் உடலைப் பார்த்து பெற்றோர் உறவினர்கள் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.
இது குறித்து அம்பாத்துரை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.