தமிழக சட்டமன்ற தேர்தலில் கூடுதல் வாக்குச்சாவடி அமைக்கப்படுவதுடன், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் வாக்களிக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் என இந்திய தேர்தல் ஆணைய பொது செயலாளர் உமேஷ் சின்ஹா தெரிவித்துள்ளார்.
தமிழகம் வந்துள்ள உமேஷ் சின்ஹா தலைமையிலான இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழு சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து இரண்டாவது நாளாக சென்னை கிண்டி நட்சத்திர ஓட்டலில், ஆலோசனை நடத்தியது. அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றும் தலைமை செயலாளர், காவல்துறை டி.ஜி.பி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உமேஷ் சின்ஹா, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 1000 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டு அருகாமையில் புதிய வாக்குச்சாவடிகள் அமைக்க முடிவெடுக்கபட்டுள்ளதாக தெரிவித்தார். 80 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இருப்பிடத்துக்கே சென்று தபால் வாக்குகள் பெற ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார்.
கொரோனா காலம் என்பதால் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 10 சதவீதம் வரை கூடுதலாக செலவு செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளதை சுட்டிக்காட்டிய அவர், தமிழகத்தில் நடைபெறும் தேர்தலில் இந்த தொகையை அதிகரிப்பது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
முன்னதாக 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தல் தொடர்பான ஆய்வு அறிக்கை புத்தகமாக வெளியிடப்பட்டது. வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான கையேடு , வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்த குறும்படமும் வெளியிடப்பட்டது.