தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்வதற்காக இந்திய தேர்தல் ஆணைய பொதுச் செயலாளர் உமேஷ் சின்ஹா தலைமையில், தேர்தல் ஆணைய அதிகாரிகள் சென்னை வந்துள்ளனர்.
நடப்பு சட்டமன்றத்தின் பதவிகாலம் மே 24 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசிக்க, இரண்டு நாள் பயணமாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழு சென்னை வந்துள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்றும் நாளையும் சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை மேற்கொள்ள இருக்கின்றனர்.
அரசியல் கட்சி பிரமுகர்கள் கருத்துகளை முதலில் கேட்டறிகின்றனர். இதனை தொடர்ந்து அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர். அதன் தொடர்ச்சியாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.
பணப் பட்டுவாடாவை தடுப்பது உள்ளிட்ட கண்காணிப்பு குறித்து அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்துடன் நாளை ஆலோசனை மேற்கொள்கின்றனர்.