தாராபுரத்தில் உள்ள பிரபல தொழில் குழுமமான வெங்கட்ராம் செட்டியார் சன்ஸ் நிறுவனங்களின் ஒரு அங்கமாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நகை கடை தொடங்கப்பட்டுள்ளது. தாராபுரத்தில் தானிய கிடங்கு, தியேட்டர் , திருமண மண்டபங்கள், மற்றும் பல்வேறு தொழில்களில் வெங்கட்ராம் சன்ஸ் நிறுவனம் பாரம்பரியமாக ஈடுபட்டு வருகிறது. பலராமன், ஹரி என்பவர் இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் ஆவார்கள். நகைக்கடையை நடிகை ஓவியாவை வைத்து ஹரி திறந்து வைத்து பிரமாண்டம் காட்டியுள்ளார்.
நகை சீட்டில் சேரும் வாடிக்கையாளர்களுக்கு குலுக்கல் முறையில் கார், பைக், ஸ்கூட்டி, மற்றும் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் பரிசளிப்பதாக ஹரி விளம்பரம் செய்துள்ளார். அவ்வப்போது, தன் நகை கடைக்கு நடிகைகள் நிக்கி கல்ராணி, பிக்பாஸ் ஷிவானி ஆகியோரையும் அழைத்து வந்து வாடிக்கையாளர்களுக்கு பரிசுகளை வழங்கி அசத்தியுள்ளர். இதை பார்த்து நம்பிய ஆயிரக்கணக்கான மக்கள் மாதம் ஆயிரம் ரூபாய் முதல் பத்தாயிரம் வரை நகைச்சீட்டில் கட்டி வந்துள்ளனர்.
இந்த நிலையில் , சில நாள்களாக கடை திறக்கப்படவில்லை. நகைகடை உரிமையாளர் ஹரி குடும்பத்தோடு தலைமறைவாகி விட்டதாக தகவல் பரவியது. இதனால், சீட்டு போட்டவர்கள் கடைமுன்பு சாலைமறியலில் ஈடுபட்டதோடு 100- க்கும் மேற்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
வெங்கட்ராம் சன்ஸ் என்ற பாரம்பரிய பெயரை நம்பி நகை கடை அதிபர் ஹரிக்கு 1கோடி முதல் மூன்று கோடி வரை கடனாக அரசியல் பிரமுகர்கள் கடன் கொடுத்துள்ளதாக தெரிகிறது. கடன் கொடுத்தவர்களுக்கும் ஹரி பணத்தை திருப்பி கொடுக்கவில்லை.அதே போல, ஹரிக்கு தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை கிலோ கணக்கில் கடனாக கொடுத்த கோவை, மதுரை, சென்னையை சேர்ந்த மொத்தநகை வியாபாரிகளும் கடனாக கொடுத்துள்ளனர். இவர்களும் மாயமான ஹரியை தேடி வந்தனர்.
கிட்டத்தட்ட 15 கோடி ரூபாய் வரை தொழிலில் ஹரி நஷ்மடைந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில்தான் தலைமறைவான ஹரி திருச்சி அருகே துடையூரில் தன் தந்தை பலராம், தாயார் புஷ்பா, மனைவி மற்றும் குழந்தையுடன் தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளது தெரிய வந்தது. தற்போது, ஹரியின் குடும்பத்தினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.