நடிகை ஓவியா திறந்து வைத்த நகைக்கடையின் அதிபர் நஷ்டம் காரணமாக குடும்பத்துடன் விஷம் குடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பெரியகடை வீதியில், வெங்கட்ராம் செட்டியார் சன்ஸ் என்ற பெயரில் நகைக்கடை இயங்கி வருகிறது. இந்த கடையை நடிகை ஓவியா திறந்து வைத்தார். கடையின் உரிமையாளர் பலராமனும் இவரின் மகன் ஹரியும் கடையை நடத்தி வந்தனர். நகைச்சீட்டும் நடத்தி வந்தனர். ஏராளமான மக்கள் நகைச்சீட்டு கட்டி வந்தனர்.
கொரோனா காரணமாக நகை வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட 15 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நகைசீட்டு கட்டியவர்கள் கடும் நெருக்கடி கொடுத்துள்ளனர். அவர்களுக்கு நகைகள் கொடுக்க முடியாமல் பலராமனும் ஹரியும் திணறினர். இந்த நிலையில், 18 ஆம் தேதி நகைச்சீட்டு கட்டியவர்கள் கடையை முற்றுகையிட்டதோடு சாலை மறியலிலும் ஈடுபட்டனர். தாராபுரம் போலீஸாரும் பலராமன், ஹரியிடம் விசாரணை மேற்கொண்டனர். இதன் காரணமாக, பலராமன், ஹரி அவமானமடைந்தனர்.
இதையடுத்து, தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து திருச்சி மணப்பாளை அருகேயுள்ள துடையூர் என்ற இடத்தில் லாட்ஜ் எடுத்து தங்கினர். கார் டிரைவர் ஐய்யப்பனுக்கு மட்டும் தனி அறை கொடுத்து விட்டு மற்றவர்கள் வேறு அறையில் தங்கியுள்ளனர். பின்னர், அறைக்குள் பலராமன் அவரின் மனைவி புஷ்பா, ஹரி அவரின் மனைவி திவ்யா ஆகியோர் விஷம் குடித்தனர். ஹரியின் 8 வயது மகள் ராதாவுக்கும் விஷம் கொடுத்துள்ளனர்.
நேற்று காலை நீண்ட நேரமாகியும் பலராமன் குடும்பத்தினர் தங்கிய அறை கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து, கார் டிரைவர் ஐய்யப்பன் லாட்ஜ் ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர். உள்ளே மயங்கிக்கிடந்த அனைவரையும் மீட்டு திருச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மருத்துவமனையில் 5 பேருக்கும் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.