தமிழக சட்டசபை தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழு இன்று சென்னை வருகிறது.
தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம், வரும் மே மாதம் நிறைவடைகிறது. எனவே, தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை தலைமைத் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இதற்காக, தலைமை தேர்தல் ஆணைய பொதுச்செயலாளர் உமேஷ் சின்ஹா தலைமையிலான, உயர்மட்ட அதிகாரிகள் குழு இரண்டு நாள் பயணமாக, இன்று சென்னை வருகிறது.
தலைமை தேர்தல் ஆணையத்தின் துணை இயக்குனர்கள் சுதீப் ஜெயின், ஆஷிஷ் குந்த்ரா, பீஹார் தலைமை தேர்தல் அதிகாரி ஸ்ரீனிவாசா, தேர்தல் ஆணைய இயக்குனர் பங்கஜ் ஸ்ரீவத்சவா, செயலர் மாலே மாலிக் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.
சட்டசபை தேர்தல் குறித்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் இக்குழுவினர் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர். வருமான வரித்துறை அதிகாரிகள் உடனும் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஆணையர்களுடன், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆலோசனை நடத்துகின்றனர்.
தலைமைச் செயலாளர் சண்முகம், டி.ஜி.பி. திரிபாதி, அரசின் பல்வேறு துறை செயலர்களுடன் தேர்தல் ஆணையக் குழுவினர் நாளை ஆலோசிக்கின்றனர்.
இதைத் தொடர்ந்து, புதுச்சேரி செல்லும் இக்குழுவினர், அங்கு சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க உள்ளனர்.