தைத்திருநாளை முன்னிட்டு பொங்கல் பரிசுடன், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டாரத்தில் உள்ள இருப்பாளி கிராமத்தில் அம்மா மினி கிளினிக்கை தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், தமிழர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன், தலா 2 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார்.
ஜனவரி 4ஆம் தேதி முதல் ரேசன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகை மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி தொடங்கும் என தெரிவித்த அவர், முன்னதாக குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்படும் என்றார்.
பொங்கல் தொகுப்பில் ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, உலர் திராட்சை, முந்திரி பருப்பு தலா 20 கிராம், ஏலக்காய் 5 கிராம் ஆகியவற்றுடன் துண்டு கரும்புக்கு பதிலாக முழுக்கரும்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.