சென்னையில் பாலியல் வன்கொடுமை செய்து விட்டு அந்த பெண்ணிடம் நாளை மீண்டும் வருவேன் என்று கூறி சென்ற வட இந்திய இளைஞர் தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைக்கப்பட்டார்.
சென்னை வியாசர்பாடி பகுதியில் பாக்கியராஜ்- ரம்யா தம்பதி வசித்து வந்தனர். பாக்கியராஜ் பாரிமுனையில் மின் விளக்கு கடை வைத்துள்ளார். கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்தது. இந்த நிலையில் , தெருத் தெருவாக மிக்ஸி விற்கும் நபர் ஒருவன், ரம்யாவின் வீட்டுக்கு வந்து மிக்ஸி வாங்குமாறு கேட்டுள்ளான். ரம்யா வேண்டாம் என்று கூறவே, 'வீட்டில் வேறு யாராவது இருந்தால் கூப்பிடுங்கள் அவர்களிடம் கேட்கிறேன் ' என்று அந்த நபர் கூறியுள்ளான். அதற்கு , ரம்யா வீட்டில் வேறு யாரும் இல்லை என பதிலளித்துள்ளார். இந்த சமயத்தில், திடீரென்று அந்த நபர் ரம்யாவை வீட்டுக்குள் தள்ளி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளான்.
மேலும், வெளியே யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளான். நாளை மீண்டும் வருகிறேன் என்று கூறி சென்றுள்ளான். வீடு திரும்பிய கணவர் பாக்கியராஜிடத்தில் நடந்ததை கூறி ரம்யா அழுதுள்ளார். மேலும் , அந்த நபர் நாளை வருவதாகவும் கூறி சென்றது குறித்து பயத்துடன் கூறியுள்ளார்.
உடனே, பாக்கியராஜ் அக்கம் பக்கத்தினரிடம் நடந்த சம்பவம் பற்றி கூறி அவனை பிடிக்க திட்டமிட்டார். பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு விட்டு எந்த பயமும் இல்லாமல் அடுத்த நாள் மிக்ஸி விற்பவன் போல, ரம்யா வீட்டுக்கு அந்த இளைஞன் வந்தான். வீட்டை சுற்றி மறைவாக இருந்த கணவர் பாக்கியராஜ் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவனை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பிறகு, வியாசர்பாடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் . போலீசாரின் விசாரணையில் பிடிபட்டவன் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த முகமது ஆரிப் என்பது தெரிய வந்தது.
மகாகவி பாரதியார் நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது ஆரிப்பிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்