அரியலூரை சேர்ந்த இயற்கை ஆர்வலர் மரம் கருப்பையாவுக்கு சவுதி அரேபியா நாட்டில் பணியாற்றி வரும் தமிழர்கள் சாய்வு கட்டில் உள்ளிட்ட பொருட்களை வாங்கி கொடுத்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள கல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா (வயது 90) . இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் கருப்பையா மிகுந்த அக்கறை கொண்டவர். கடந்த 40 ஆண்டுகளாக தமிழகத்தில் 15 மாவட்டங்களில் சைக்கிளில் செனறே மரக்கன்றுகளை நட்டு வளர்த்துள்ளார். கிட்டத்தட்ட 4 லட்சம் மரக்கன்றுகளை தன் வாழ்நாளில் கருப்பையா நட்டுள்ளார். இதனால், கருப்பையாவுக்கு மரம் கருப்பையா என்ற பெயரும் உண்டு. தற்போது, முதுமை காரணமாக மரம் கருப்பையா வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்.
வீட்டில் படுத்து உறங்க பாய் கூட இல்லாமல் கோணிப்பையில் படுத்து உறங்கிய மரம் கருப்பையாவின் நிலை குறித்து, மீடியாக்களில் செய்தி வெளியானது. செய்தியை பார்த்த சவுதி அரேபியாவில் பணியாற்றும் மக்கள் பாதை' அமைப்பை சேர்ந்த தாமஸ் என்பவர் அரியலூரிலுள்ள தன் நண்பர்களை தொடர்பு கொண்டு மரம் கருப்பையாவுக்கு தேவையான உதவிகளை செய்ய 25,000 ரூபாய் பணம் அனுப்பியிருந்தர்.
இதைத் தொடர்ந்து, மரம் கருப்பையாவுக்கு தேவையான பொருள்களை வாங்கிக் கொடுத்துள்ளனர். வயது முதிர்ந்த நிலையில் அவருக்கு படுத்துறங்க சாய்வு கட்டிலும் வழங்கப்பட்டது. மேலும், எந்த உதவி வேண்டுமானாலும் தங்களை தொடர்பு கொள்ளுமாறு மரம் கருப்பையாவின் மனைவி செங்கமலத்திடம் மக்கள் பாதை அமைப்பினர் கூறி சென்றனர். மரம் கருப்பையாவுக்கு உதவ முன்வந்தவர்களுக்கு அவரின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.