தேனியில், போலி ரசீது மூலம் பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்றதாக, தனியார் ஏலக்காய் விற்பனை நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் விளையும் ஏலக்காய்கள் இந்திய நறுமண வாரியத்தின் வழியாக விற்கப்படுகிறது. நறுமண வாரியத்துக்கு விவசாயிகள் கொண்டுவரும் ஏலக்காயைத் தரம் வாரியாக பிரித்து மின்னணு மூலம் ஏலம் நடை பெறுவது வழக்கம். இது தவிர தனியார் ஏலக்காய் விற்பனை நிலையங்களும் இந்தப் பகுதியில் செயல்பட்டு வருகின்றன. இதுபோன்ற தனியார் ஏலக்காய் விற்பனை நிறுவனம் ஒன்றில் போலி ரசீது தயாரித்து கோடிக்கணக்கில் மோசடி நடைபெற்றுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
போடிநாயக்கனூர் புது காலனியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் ஏலக்காய் விற்பனை நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த விற்பனை நிலையத்தின் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார், கேரளாவைச் சேர்ந்த தியாகராஜன்.
இந்த விற்பனை நிலையத்துக்கு விவசாயிகள் கொண்டு வரும் ஏலக்காய்களை வாங்கிக் கொண்டு, அதற்கான கிராஃப்ட் ரசீது பெற்று, அந்த ரசீதின் மூலம் பைனான்சியர்களிடம் கடன் பெற்று விவசாயிகளுக்குக் கொடுப்பர். பிறகு, பைனான்சியர்களுக்கு 2 சதவிகிதம் கமிஷன் தொகையுடன் அந்தப் பணம் திரும்பக் கொடுக்கப்படும்.
இந்த முறையில், குப்பிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த வடிவேல் என்பவரிடம் வெவ்வேறு தேதிகளில் ஏலம் விடப்பட்ட 1500 கிலோ ஏலக்காய்களுக்கான கிராஃப்ட் ரசீதை வழங்கி 48 லட்ச ரூபாய் கடன் பெற்றுள்ளதாகத் தெரிகிறது. இதேபால் பல்வேறு நபர்களிடம் இரண்டு கோடிக்கும் மேல் கிராப்ட் ரசீது மூலம் கடன் பெற்றுள்ளனர். பல மாதங்களாகியும் பணத்தைத் திரும்பத் தராததால், ஆறுமுகம் மீது வடிவேலு போலீசில் புகார் அளித்தார். அதனடிப்படையில் ஆறுமுகம், அவரது மனைவி, மகன் மற்றும் மேலாளர் தியாகராஜன் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே ஆறுமுகம், தனது மேலாளர் தியாகராஜன் போலியான கிராஃப்ட் ரசிகர்களைத் தயாரித்து பலரிடம் கோடிக்கணக்கில் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளதாகப் போலீசில் புகார் அளித்துள்ளார். போலியான கிராஃப்ட் ரசீதுகளைத் தயாரித்து மோசடி செய்ததாக மேலாளர் தியாகராஜன் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த மோசடி அந்தப் பகுதியில் உள்ள ஏலக்காய் விவசாயிகள் மற்றும் பைனான்சியர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.