கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே, பக்கவாட்டில் லாரி பலமாக மோதி உருக்குலைந்த காரில் பயணித்த 8 பேரும் உயிர்தப்பிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு பகுதியை சேர்ந்தவர் சகாயதாஸ், நேற்று அதிகாலை தனது இரண்டு மகள் மற்றும் மகன், உறவினர் உள்ளிட்ட 8 பேருடன் நாகர்கோவிலில் உள்ள தேவாலயத்திற்கு கூட்டு பிரார்த்தனைக்காக டாடா சுமோ காரில் சென்றுள்ளார். தக்கலை அருகே சுவாமியார்மடம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது எதிரே அதிவேகமாக வந்த காய்கறி லாரி பக்கவாட்டில் பலமாகி மோதியபடி சென்றது.
கண்ணிமைக்கும் நேரத்தில் டாடா சுமோ உருக்குலைந்து, அதில் பயணித்தவர்கள் கொத்து கொத்தாக கீழே விழுந்தனர். குழந்தை வீறிட்டழும் சத்தமும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
டாடா சுமோவில் பயணித்த 8 பேரும் படுகாயங்களுடன் உயிர்தப்பினர். தற்போது அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. டாடா சுமோ மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற கோவில்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் ரவிச்சந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.