தமிழ்நாடு மின்சார வாரியம், ஒருபோதும் தனியார் மயமாக்கப்படாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதிபடத் தெரிவித்துள்ளார். மக்களை சந்திப்பதில் யார் முன்னோடி? என எதிர்க்கட்சித் தலைவருக்கு, முதலமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சேலம் மாவட்டத்தின் மூன்றாவது அம்மா மினி கிளினிக், ஆட்டையாம்பட்டி அருகே வாணியம்பாடி கிராமத்தில் அமைக்கப்பட்டுத் திறக்கப்பட்டுள்ளது. கொட்டும் மழையில், அம்மா மினி கிளிக்கை திறந்து வைத்த பின்னர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.
பேரறிஞர் அண்ணா குறிப்பிட்டுள்ளவாறு, ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்பதற்கேற்ப ஆட்சி நடத்தியவர் எம்ஜிஆர் என, முதலமைச்சர் புகழாரம் சூட்டினார். எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு, தமிழ்நாட்டு மக்கள் தான் வாரிசுகள் என முதலமைச்சர் குறிப்பிட்டார்.
காணொலிக் காட்சியில் மு.க.ஸ்டாலின் அரசை விமர்சிப்பதாகக் குறிப்பிட்ட முதலமைச்சர், அவருக்கு எதிர்கேள்வி எழுப்பினார்.
ஒமலூரில், சேலம் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளை சந்தித்து, சட்டமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்திய பின்னர், முதலமைச்சர், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழ்நாடு மின்சார வாரியம் தனியார் மயமாக்கப்படாது என்றும், இலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது என்றும், முதலமைச்சர் உறுதிபடத் தெரிவித்தார்.