தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளிலும், புதுச்சேரியிலும் நேற்றிரவு முதல் விட்டுவிட்டு மிதமான மழை பெய்து வருகிறது.
இராமநாதபுரத்திலும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நேற்றிரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் நெற்பயிர்களும், மானாவாரி நிலங்களில் பயிரிட்டுள்ள மிளகாய்ப் பயிரும் நல்ல விளைச்சல்காணும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. மார்கழி மாத மழை மானாவாரிப் பயிர்களுக்கு மிகப் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, மணல்மேடு, செம்பனார்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு முதல் மழை பெய்து வருகிறது. நிவர், புரெவி புயல்களின் போது பெய்த கனமழையால் விளைநிலங்களில் தேங்கிய மழைநீர் வடிந்துள்ள நிலையில், இப்போது மீண்டும் மழைபெய்து வருவதால் விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர்.
செங்கல்பட்டு, மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, சிங்கப்பெருமாள் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு மழை பெய்தது. காயரம்பேடு ஏரி ஏற்கெனவே நிரம்பி இருந்த நிலையில் நேற்றிரவு பெய்த மழையால் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் நெல்லிக்குப்பம் - கூடுவாஞ்சேரி சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்கிறது.
புதுச்சேரியில் நேற்று முதல் விட்டு விட்டு லேசான மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் தெருக்களிலும் சாலைகளிலும் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் தங்களது வீடுகளைவிட்டு வெளிவர முடியாத நிலை உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் தென்பெண்ணை ஆற்றின் மீதுள்ள மேம்பாலத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், தரைப்பாலத்தில் வாகனங்கள் சென்று வந்தன. இந்நிலையில் கடந்த இரு நாட்களாகக் கனமழை பெய்து தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தரைப்பாலம் மூடப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் கடந்த இருநாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் திருக்கோவிலூர் - விழுப்புரம் சாலையில் உள்ள அரகண்டநல்லூரில் ஏரியின் உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் கால்வாய் நிரம்பித் தனியார் பள்ளி வழியாகச் சாலையில் பெருக்கெடுத்துப் பாய்கிறது. இதனால் அந்தப் பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்றிரவு மழை பெய்ததால் பிரம்மதேசம் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேறி மரக்காணம் ராஜம்பாளையம் வன்னிப்பேர் இடையிலான தரைப்பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் பாய்கிறது. இதனால் வன்னிப்பேர் - ராஜம்பாளையம் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டாரத்தில் மழை பெய்ததால் கண்டமங்கலம், குறுங்குடி, பழஞ்சநல்லூர், மடப்புரம் ஆகிய ஊர்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
இதேபோல் திட்டக்குடி, வேப்பூர் வட்டங்களிலும் நேற்றிரவு பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
காஞ்சிபுரத்திலும், சுற்றுவட்டாரத்தில் உள்ள தாமல், பாலுச்செட்டிச் சத்திரம், ஓரிக்கை, செவிலிமேடு, வாலாஜாபாத் ஆகிய ஊர்களிலும் இன்று அதிகாலை முதல் விட்டு விட்டு மழை பெய்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நேற்றிரவு கன மழை பெய்தது. இதனால் ஆறுகள், ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன. ஏற்கெனவே நிரம்பியுள்ள ஏரிகளுக்கு மேலும் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் உபரிநீர் கால்வாய் வழியாக வெளியேற்றப்படுகிறது. கால்வாய்களில் வெள்ளம் கரைபுரண்டு பாய்வதால் விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது.
விழுப்புரம் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக நேற்றிரவு கனமழை பெய்தது. திண்டிவனம் அடுத்த கீழ்பேரடிக்குப்பம் ஏரி ஏற்கெனவே நிரம்பியிருந்த நிலையில் நேற்றிரவு கனமழையால் ஏரிக்கு நீர்வரத்து திடீரென அதிகரித்தது. இதனால் மதகும் கரையும் உடைந்ததால் அவ்வழியே வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்கிறது.
ஏரி உடைந்து நீர் வெளியேறியதில் 25க்கு மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததுடன், விளை நிலங்களும் நீரில் மூழ்கின.
தகவலறிந்த விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திண்டிவனம் துணைக் கண்காணிப்பாளர், வட்டாட்சியர் ஆகியோர் விரைந்து சென்று பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்தனர்.
திண்டிவனம் அருகே சின்னநெற்குணம் என்னும் ஊரிலும் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. குடியிருப்புகள், விளைநிலங்கள் ஆகியவற்றில் தண்ணீர் குளம்போல் தேங்கியுள்ளது.