வரும் சட்டமன்ற தேர்தலில் நடிகர் சத்யராஜின் மகள் போட்டியிட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதத்தில் நடைபெற வாய்ப்புள்ளது. வேறு எந்த தேர்தலிலும் இல்லாத ஒரு எதிர்பார்ப்பு இந்த தேர்தலில் நிலவுகிளது. தமிழகத்தின் முக்கியமான அரசியல் தலைவர்களான கருணாநிதி, ஜெயலலிதா மறைந்த பிறகு, நடைபெறப் போகும் முதல் சட்டமன்ற தேர்தல் இது. தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களான நடிகர் ரஜினி காந்தும் , கமல்ஹாசனும் கூட இந்த தேர்தலில் குதிப்பதால், நிச்சயம் தமிழக வாக்காளர்களுக்கு புதிய அனுபவமாக வரும் சட்டமன்ற தேர்தவ் இருக்கும்.
வரும் சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலின் ஆகியோருக்கு உச்ச நடிகர்கள் டஃப் கொடுப்பார்களா என்பது போக போக தெரியும். தமிழகத்தில், இப்படி நடிகர்கள் அரசியலில் குதித்து கொண்டிருக்கையில் தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகராக கருதப்படும் சத்யராஜின் மகள் திவ்யாவும் இந்த தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். ஊட்டச்சத்து நிபுணரான திவ்யா, 'மகிழ்மதி இயக்கம்' என்ற அமைப்பை நிறுவி ஏழை மக்களுக்கு சேவை செய்து வருகிறார்.
ஊட்டச்சத்து குறைவாகவுள்ள குழந்தைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு சத்துமிக்க உணவுகளை வழங்கி வலுமிக்க குழந்தைகளாக மாற்றும் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள திவ்யாவுக்கு அரசியலில் ஈடுபட வேண்டுமென்பது நீண்ட கால ஆசை. ஆனால், இதுவரை எந்த கட்சியிலும் திவ்யா சேரவில்லை. அதே வேளையில், வரும் சட்டமன்ற தேர்தலில் திவ்யா போட்டியிட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
இது குறித்து திவ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், 'என் அரசியல் வாழ்க்கையில் தந்தையின் பெயரை, புகழை பயன்படுத்த மாட்டேன். ஆனால், என்னுடன் கை கோத்து தந்தை செயல்படுவார்' என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே, தி.மு.க வுக்கு ஆதரவாக சத்யராஜ் பிரசாரத்தில் ஈடுபடப் பவதாக வதந்தி பரவியது.
இதற்கு பதிலளித்துள்ள நடிகர் சத்யராஜ், 'என் மகளை தைரியமான பெண்ணாக நான் வளர்த்துள்ளேன். ஊட்டச்சத்து நிபுணராக தன் தொழிலில் வெற்றி பெற்றுள்ளார். என் மகளுக்கு நான் பக்கபலமாக இருப்பேன். தேர்தலில் போட்டியிட்டால் நிச்சயம் அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன்' என்று கூறியுள்ளார்.