மதுரையில் தனிமையில் வாடிய மூதாட்டி உயிரோடு இருக்கும் வரை அவரின் வீட்டு வாடகையை செலுத்தி விடுவதாக கொடைக்கானலில் செயல்படும் பள்ளி ஒன்றின் செயலாளர் அறிவித்துள்ளார்.
மதுரை கோரிப்பாளையம் வயக்காட்டு தெருவை சேர்ந்த பாத்திமா சுல்தான் என்ற 80 வயது மூதாட்டி உடல்நிலை குன்றிய நிலையில் கையில் மனுவுடன் கடந்த திங்கள்கிழமை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்திருந்தார். அலுவலகத்துக்கு வந்த மாவட்ட ஆட்சியர் அன்பழகன் மூதாட்டியை பார்த்ததும் திடீரென காரை நிறுத்தி இறங்கி அவரிடத்தில் நலம் விசாரித்தார். பிறகு, தேநீர் வாங்கி கொடுத்து ஆசுவாசப்படுத்தினார். பின்னர், மூதாட்டியிடம் மனு குறித்து கேட்டபோது , தான் தங்கியிருந்து வீட்டு உரிமையாளர் தன்னை வீட்டை விட்டு காலி செய்து விட்டு பணத்தை தராமல் ஏமாற்றுவதாக கூறினார்.
பிறகு, நடக்க முடியாத அந்த மூதாட்டியை மதுரை ஆட்சியர் தனது காரிலயே அவரின் வீட்டுக்கு கொண்டு சென்று விட்டார். இது குறித்து மீடியாக்களில் செய்திகள் வெளியானது. இதைத் தொடர்ந்து, பல முனைகளில் இருந்து மூதாட்டிக்கு உதவிகள் கிடைத்து வருகிறது. கொடைக்கானல்,பண்ணைக்காடு விவேகானந்தா வித்யாலயா பள்ளியின் செயலாளர் சுவாமி கங்காதரனாந்தா இன்று மதுரை வந்து மூதாட்டியை சந்தித்து ஆறுதல் கூறினார். பிறகு, மூதாட்டி உயிரோடு இருக்கும் வரை வீட்டு வாடகையை தான் ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்தார். மேலும் மூதாட்டிக்கு ஒரு மாதத்துக்கு தேவையான அரிசி , பருப்பு மற்றும் பழங்கள் வழங்கினார். அதோடு ரூ, 10,000 நிதியுதவியும் அளித்தார்.