கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் 8 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த மாமல்லபுரம், மேட்டூர் அணை பூங்கா, திருச்சி முக்கொம்பு பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலா தளம் பொதுமக்களின் பார்வைக்காக நிபந்தனைகளுன் திறக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா தளத்திற்கு வருபவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வரவேண்டும் எனவும் நாள் ஒன்றிற்கு 2 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் அனுமதி நுழைவு சீட்டு ஆன்லைன் மூலமாக மட்டுமே வழங்கப்படும் எனவும், 60 வயதுக்கு மேல் உள்ளவர்களும், 10 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கும் அனுமது இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
திருச்சி முக்கொம்பு சுற்றுலா தளம் எட்டு மாதங்களுக்கு பின்னர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வர தொடங்கியுள்ளனர். தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். அனைவரும் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் எனவும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான மேட்டூர் அணை பூங்கா 8 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு, கிருமி நாசினிகளை கொண்டு கைகள் சுத்தம் செய்த பின்னரே பூங்காவிற்குள் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். நீண்ட இடைவெளிக்கு பின்னர் பூங்கா திறக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.