சென்னை பம்மல் பகுதியில் அமைந்துள்ள திருப்பனந்தாள் ஏரி முற்றிலும் மாசு அடைந்து தண்ணீர் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
சென்னை புறநகர் பகுதியான பல்லாவரத்தை அடுத்த பம்மலில் திருப்பனந்தாள் ஏரி அமைந்துள்ளது. சுமார் இரண்டரை கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த ஏரி தற்போது முழுவதுமாக மாசுபட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த ஏரியைச் சுற்றி பூங்கா , மக்கள் நடை பயிற்சி மேற்கொள்ள பாதை சுற்றிலும் எல்இடி விளக்குகள் அமைத்து சீரமைக்கப்பட்டது
ஆனால், ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து குப்பைகள் மற்றும் கழிவுநீர் அதிக அளவில் தண்ணீரில் கலக்கிறது. இதனால், ஏரியின் தண்ணீர் மொத்தமாக மாசுபட்டு போனது. ஏரியின் தண்ணீரில் பிளாஸ்டிக் பாட்டில்கள் , பிளாஸ்டிக் கவர்கள் குப்பை போல குவிந்து கிடக்கின்றன. இதனால், ஏரியில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் அந்த பகுதியில் வாழும் மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
கோடை காலங்களில் பல்லாவரம் மற்றும் பம்மல் பகுதியில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும். இப்படிப்பட்ட சூழலில் கூட இந்த ஏரி முழுவதும் நிரம்பி இருந்தாலும் தண்ணீரை உபயோகிக்க முடியாத நிலைமைதான் உள்ளது. நிவர் புயலால் ஏரிக்கருகே விழுந்த மரங்கள் கூட இன்னும் அப்புறப்படுத்தப்படவில்லை என்றும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஏரியின் அருகே அமைக்கப்பட்ட பூங்கா மற்றும் நடைபாதையை தற்போது மக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு உடைந்து போய் காணப்படுகிறது. தண்ணீர் குழாய்கள் கூட சேதமடைந்து கிடக்கின்றன. எனவே, பம்மல் ஏரியை உடனடியாக தூர்வாரி தண்ணீரை மக்கள் பயன்படுத்தும் வகையில் ஏரியின் சுற்றுப்புறத்தை சீரமைக்க வேண்டுமென்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.