நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரசவேச அறிவிப்பால் மண் சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர் மானாமதுரை ரசிகர்கள்.
வருகிற டிசம்பர் 31-ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியலுக்கு வரப் போவதாக அறிவித்துள்ள நிலையில் அவரின் 70 வது பிறந்த நாளை ரசிகர்கள் விமரிசையாக கொண்டாடினர். சென்னையில், ரஜினிகாந்த் இல்லாத நிலையில் கூட அவரின் வீட்டு முன்பு ரசிகர்கள் குவிந்து ரஜினிகாந்தின் பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தனர். ரஜினிகாந்த் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் உச்சக்கட்டமாக சில ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள கரிசல்குளம் கிராமத்தில் கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோயிலில் உள்ளது. இந்த அம்மன் கேட்ட வரம் தரும் சக்தி கொண்டவர் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ரசிகர்கள் சிலர், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் மண் சோறு சாப்பிடுவதாக நேர்த்திக்கடன் செய்வதாக வேண்டிக் கொண்டனர்.
இந்த நிலையில், ரஜினிகாந்த் வரும் ஜனவரி மாதம் அரசியலுக்குள் நுழைவதாக அறிவித்ததால் நேர்ச்சை மேற்கொண்ட ரசிகர்கள் மனமகிழ்ந்து போனார்கள். பின்னர், தாங்கள் வேண்டிக் கொண்டபடி மண் சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடனை நிறைவு செய்ய முடிவு செய்தனர். நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்த தினத்தில் முத்துமாரியம்மன் கோயிலில் மண் சோறு சாப்பிட்டனர். தங்கள் வேண்டுதல் நிறைவேறியதால் மண்சோறு சாப்பிட்டும் யாகம் வளர்த்தும் அன்னதானம் வழங்கியும் வேண்டுதலை நிறைவேற்றியதாக கூறும் ரசிகர்கள், நடிகர் ரஜினிகாந்துக்கு நீண்ட ஆயுள் கிடைக்க வேண்டுமென்று சிறப்பு பூஜை செய்ததாக தெரிவித்துள்ளனர்.