சேலத்தில் பெற்ற குழந்தையை ஒரு லட்சத்துக்கு விற்பனை செய்த கணவனை மனைவி போலீஸில் சிக்க வைத்தார். குழந்தையை வாங்கிய விற்க உதவிய பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் அன்னதானப்பட்டி அருகே கரியபெருமாள் கரடு பகுதியை சேர்ந்தவர் விஜய். கூலித்தொழிலாளி இவரின் மனைவி பெயர் சத்யா. இந்த தம்பதிக்கு ஏற்கெனவே 2 பெண் குழந்தைகள் இருந்த நிலையில் 15 நாள்களுக்கு முன்பு சேலம் அரசு மருத்துவமனையில் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து, விஜய் தன் மனைவி சத்யாவிடம், நமக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர் . இதனால் கடைசி பெண் குழந்தையை விற்றுவிடலாம்' என்று யோசனை தெரிவித்தார். சத்யா குழந்தையை கொடுத்து மறுத்து வந்தார். இந்த நிலையில் , கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜய், சத்யாவுக்கு தெரியாமல் குழந்தையை ஒரு லட்சத்துக்கு ஈரோட்டைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவரின் மனைவி நிஷாவுக்கு விற்றுள்ளார்.
விஜய் குழந்தையை விற்றதை அறிந்த மனைவி சத்யா கணவரிடத்தில் சண்டையிட்டு வந்தார். 'தயவு செய்து வெளியே கூறி விடாதே' என்று சத்யாவை விஜய் சமாதானம் செய்து வந்துள்ளார். இதற்கிடையே, குழந்தையின் நினைவாகவே இருந்த சத்யாவின் கனவில் விற்கப்பட்ட குழந்தையின் முகம் வந்தவண்ணம் இருந்துள்ளது. ஒரு கட்டத்தில் பெற்ற பிள்ளையை மறக்க முடியாத சத்யா, தன் குழந்தையை கணவர் விற்று விட்டதாக கூறி கதறி அழுதுள்ளார். தன் குழந்தையை மீட்க உதவி புரியும்படி உறவினர்களிடத்தில் கண்ணீர் விட்டு கதறியுள்ளார்.
இதையடுத்து, பெண் குழந்தை விற்கப்பட்டது குறித்த சேலம் சைல்டு லைன் அமைப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அன்னதானப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் தலைமையில் குழந்தையை மீட்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் விஜய்யை போலீஸார்ல தேடி வந்த நிலையில் கோமதி என்பவரின் உதவியுடன் நிஷாவுக்கு விஜய் குழந்தையை விற்றது தெரிய வந்தது. தொடர்ந்து, நிஷா மற்றும் கோமதியை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாகவுள்ள விஜயை தேடி வருகின்றனர். தற்போது, குழந்தை தாயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.