தமிழ்நாடு முழுவதும், 17 சோதனைச் சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு கணக்கில் வராத, சுமார் 10 லட்ச ரூபாய் பணத்தை கைப்பற்றினர்.
விருதுநகரில், பெண் ஆர்டிஓவிடம் இருந்து, 24 லட்சம் ரொக்கம், 100 சவரன் நகை கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம், அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ரகசிய தகவலின் பேரில், விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் கலைச்செல்வியின் காரை பின் தொடர்ந்து சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார், சத்திரெட்டியப்பட்டி சோதனை சாவடி அருகே அவரது காரில் இருந்த நகை, பணத்தை பறிமுதல் செய்தனர். அங்கு வந்திருந்த ஆய்வாளர் கலைச்செல்வியின் நண்பரும், மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலக ஆய்வாளர் சண்முக ஆனந்த் காரில் இருந்த ஒன்னேமுக்கால் லட்சம் ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஜூஜூவாடி சோதனை சாவடி மற்றும் பாகலூர் சோதனை சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். கணக்கில் வராத 2 லட்சத்து 10ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.
சென்னை பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை சோதனை சாவடியிலும் கணக்கில் வராத 3 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே 2 வாகன சோதனை சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ஒரு லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் கைப்பற்றப்பட்டுள்ளது.
தமிழக கேரளா எல்லையில், புளியரை சோதனை சாவடியில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத 48ஆயிரம் ரூபாய் பணம் சிக்கியது.
அதேபோன்று, கேரள எல்லையில் அமைந்துள்ள 2 சோதனை சாவடிகளில் விடிய விடிய சோதனை நடத்திய,லஞ்ச ஒழிப்பு போலீசார், காவலர்கள் 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள ஊத்துக்கோட்டை சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் 4 மணி நேரம் சோதனை நடத்தினர்.
புதுச்சேரி எல்லையில், வானூர் வாகன சோதனைச் சாவடியிலும் சோதனை நடைபெற்றது.
கோவை திருமலையம்பாளையம் சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
தேனி வட்டார போக்குவரத்து அலுவலக சோதனை சாவடியிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
நீலகிரி மாவட்டம் தொரப்பள்ளி சோதனை சாவடியில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத 34 ஆயிரத்து 700 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.