மதுரையில் 90 வயதிலும் மக்கள் நலனுக்காக ஓய்வு பெற்ற தாசில்தார் ஒருவர் உழைத்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அண்ணா நகரில் வசிக்கும் முன்னாள் தாசில்தார் ரத்தினம் திருமங்கலம் அருகேயுள்ள கூடக் கோவில் என்ற ஊரை சேர்ந்தவர். மதுரையில் செயின்ட் மேரீஸ் பள்ளியில் படித்து அமெரிக்கன் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். கடந்த 1950 -ஆம் ஆண்டு வருவாய் துறையில்பணியில் சேர்ந்தார். படிப்படியாக முன்னேறி தாசில்தாராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். தன் பணி காலத்தில் மிக நேர்மையாக'இந்தியன்' பட தாத்தா போல பணியாற்றியுள்ளார். 'லஞ்சம் என்ற வார்த்தையையே வெறுத்தேன் ' என்று கூறும் ரத்தினத்துக்கு காமராஜர்தான் பிடித்தமான அரசியல் தலைவர்.
ரத்தினத்துக்கு சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டுமென்பதில் மிகுந்த பிரயாசை உண்டு. அதனால், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத காரை கண்டுபிடித்து அரசு பள்ளிகளுக்கு வழங்க வேண்டுமென்பது அவரின் ஆசை. அதனால், 90 வயதிலும் தானே கஷ்டப்பட்டு இந்த பெடல் காரை உருவாக்கி அசத்தியுள்ளார் . பெடல் கார் ஒன்றை தயாரிக்க ரூ. 25000 வரை செலவாகியுள்ளது. இரண்டு பேர் பெடல் காரை ஓட்டுவதற்கு தேவை. ஒரு காரில் 6 முதல் 8 மாணவிகள் மாணவிகள் வரை பயணிக்கலாம். இதே போன்று இன்னும் 3 கார்களை தயாரிக்க ரத்னம் திட்டமிட்டுள்ளார். முதல் காரை கொசவப்பட்டி அரசு பள்ளிக்கு ரத்தினம் வழங்கியுள்ளார்.
அதோடு, கொசவபட்டி கிராமத்துக்கு வார இறுதி நாட்களில் செல்லும் ரத்தினம் , குழந்தைகளுக்கு நல்லொழுக்கங்களை சொல்லும் நீதிகதைகளை கூறுவதும் உண்டு. இதனால், ரத்னத்தை கண்டால் குழந்தைகளிடத்தில் உற்சாகம் தொற்றிக் கொள்கிறது. 90 வயதிலும் ஓய்வில்லாமல் பணியாற்றும் ரத்தினம் ஒரு ஆச்சரியமான மனிதர்தான்!