நாகப்பட்டினம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் மழை வெள்ளப் பாதிப்பைப் பார்வையிட வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்துக்குச் சென்று வழிபட்டார்.
நாகூருக்குச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, தர்க்கா நிர்வாகத்தின் சார்பில் வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. நாகூர் ஆண்டவர் சன்னதிக்கு முதலமைச்சரை அழைத்துச் சென்றனர். தர்க்கா பரம்பரை கலீபா மஸ்தான் சாஹிப் தலைமையில் துவா ஓதப்பட்டது.
நாகூர் தர்க்காவில் கனமழையால் சேதமடைந்த சுற்றுச்சுவர், கீழ்க்கரைச் சாலை, குளம் ஆகியவற்றைப் பார்வையிட்ட முதலமைச்சர் அவற்றைச் சீரமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
கீழையூர் ஒன்றியத்தில் மழை வெள்ளத்தால் ஆறாயிரம் எக்டேர் பரப்பில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கருங்கண்ணியில் நீரில் மூழ்கிய நெற்பயிர்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். நீரில் மூழ்கிய நெற்பயிர்களை எடுத்துக்காட்டிய விவசாயிகள் முதலமைச்சருக்குப் பாதிப்புகளை எடுத்துக் கூறினர். அப்போது முதலமைச்சருடன் அமைச்சர்கள் வேலுமணி, விஜயபாஸ்கர், ஓ.எஸ்.மணியன் ஆகியோரும் இருந்தனர்.
வேதாரண்யம் அடுத்த பழங்கள்ளிமேடு என்னும் ஊரில் கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் அங்குள்ள 160 குடும்பத்தினர் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாமுக்கு வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்துக் குறைகளைக் கேட்டறிந்தார். முகாமில் உள்ள 15 குடும்பத்தினருக்கு அரிசி, பருப்பு, வேட்டி சேலை போர்வை உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். கனமழையால் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு 4 லட்ச ரூபாய்க்கான காசோலையையும் வழங்கினார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, கொக்காலடி, பாமணி ஆகிய ஊர்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கிய வயல்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.
திருத்துறைப்பூண்டி முகாமில் தங்கியுள்ள பொது மக்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களை அவர்களுக்கு வழங்கினார். அப்போது உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், உணவுத் துறை அமைச்சர் காமராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களில் தமிழகத்தைப் பாதிக்கும் கூறுகளைச் சுட்டிக்காட்ட முடியுமா என எதிர்க்கட்சிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். திருவாரூர் மாவட்டம் தென்னவராயநல்லூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகள் தங்கள் விளைபொருட்கள் விற்பனை செய்யக்கூடிய ஒரே மாநிலம் தமிழகம்தான் எனத் தெரிவித்தார். புதிய வேளாண் சட்டத்தால் தமிழகத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்பதால் அதைத் தான் ஆதரிப்பதாகத் தெரிவித்தார்.