வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 2வது நாளாக ஆய்வு மேற்கொள்ளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று பார்வையிடுகிறார்.
புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களை நேற்று பார்வையிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று 2ம் நாளாக திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களை பார்வையிடுகிறார். இதற்காக நாகப்பட்டினத்தில் இருந்து சாலை வழியாக திருவாரூர் மாவட்டம் வரும் முதலமைச்சர் நன்னிலத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடுகிறார். தொடர்ந்து மயிலாடுதுறை, சீர்காழி பகுதிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.
முன்னதாக கடலூர் மாவட்டத்தில் அணுகம்பட்டு என்ற இடத்தில் மழை நீரில் மூழ்கியுள்ள நெற்பயிர்களை முதலமைச்சர் பார்வையிட்டார். விளைநிலத்தில் இறங்கி விவசாயிகள் காண்பித்த சேதமடைந்த நெற்பயிர்களை பார்வையிட்டு, குறைகளை கேட்டறிந்தார்.
வல்லம்படுகை பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 500 நபர்களுக்கு அரிசி, வேட்டி சேலை உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்களையும், வெள்ளத்தில் உயிரிழந்தவர் மற்றும் ஆடு மாடு வீடு இழந்தவர்களுக்கு நிவாரண உதவிகளையும் அவர் வழங்கினார்
வீராணம் ஏரியைப் பார்வையிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடலூர் மாவட்டத்தில் விளைநிலங்கள் சேதம் தொடர்பாக கணக்கிட்டு அரசுக்கு அறிக்கை அளித்த பின் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.