உதகை மலை ரயில் தனியார் வசம் ஒப்படைக்கப்ட்டு விட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில், 13 நாட்கள் மட்டுமே தனியார் நிறுவனம் இயக்க அனுமதி அளித்துள்ளதாக ரயில்வே அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
கோயம்புத்தூர், மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினமும் நீலகிரி மலை ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயிலில் பயணிக்க உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்லாது, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் அதிக ஆர்வம் காட்டி வந்தனர்.
கொரோனா பாதிப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நீலகிரி மலை ரயில் 9 மாதத்திற்கு பிறகு கடந்த 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் இயக்கப்பட்டது. தனியார் நிறுவனம் ஒன்று ஒரு நாளைக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை பயணிக்க 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வீதம் சேலம் ரயில்வே கோட்டத்தில் கட்டணம் செலுத்தி ரயிலை இயக்கியது தெரியவந்தது.
அதில் பயணம் செய்யும் சுற்றுலா பயணிகளிடம் தலா 3000 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. நீலகிரி வாகனபதிவு படி தமிழ்நாடு 43 என்று ரயிலுக்கு அந்த நிறுவனம் பெயர் சூட்டியது. சுற்றுலாப் பயணிகளுக்கு வழியில் சிற்றுண்டி வழங்குவதற்காக விமானப் பணி பெண்களை போல் சீருடையுடன், இளம்பெண்கள் பணி அமர்த்தப்பட்டிருந்தனர்.