சூலூர் அருகே பாப்பம்பட்டியில் குடிபோதையில் மனைவியை கொன்ற கணவன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே பாப்பம்பட்டியில் வசித்து வருபவர்கள் ஆறுமுகம். அவரது மனைவி பத்மாவதி. இவர்கள் இருவரும் பழைய பாட்டில்கள் மற்றும் குப்பைகளை சேகரித்து அதை விற்று வாழ்ந்து வருகின்றனர்.
இவர்கள் தினமும் மாலை வேளைகளில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் குடிப்பதும், குடித்துவிட்டு இருவரும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொள்வதும் வழக்கம்.
நேற்று மாலை வேலை முடிந்து வந்த கணவன் மனைவி இருவரும் குடித்துவிட்டு போதையில் சண்டை போட்டுள்ளனர். ஆனால் இது வழக்கமாக நடப்பதால் அக்கம் பக்கத்தினர் யாரும் கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில் இன்று காலை பத்மாவதி ரத்த வெள்ளத்தில் படுக்கையில் கிடந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சூலூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பத்மாவதியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஆறுமுகத்தை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.