மதுரை ஆணையூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான விஜய் என்பவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நடிகர் விஜய்யின் தீவிர ரசிகராக இருந்து வருகிறார். நடிகர் விஜய்யின் நடிப்பில் திரைக்கு வரும் புதுபடங்களை ரசிகர் காட்சிகள் உள்ளிட்ட திரையரங்கு காட்சிகளையும் பல ஆயிரங்கள் செலவு செய்து டிக்கெட்களை பெறுவதும், கட்அவுட், பேனர்கள் வைப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
இந்தநிலையில், கடந்த சில நாள்களுக்கு ஏற்பட்ட விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் விஜய்யின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இப்போது, மருத்துவ சிகிச்சைக்கு ரூ 30,000 பணம் இல்லாமல் தவித்தும் வருகிறார். உடல்நிலை முற்றிலும் குணமாக இன்னும் 4 மாதங்கள் பிடிக்கும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால், ஆட்டோவும் ஓட்ட முடியாமல் குடும்ப செலவுக்கு கூட பணம் இல்லாமல் கடனில் தவித்து வருகிறார்.
நடிகர் விஜய்யின் நடிப்பில் வெளியான பிகில் பட ரிலீஸின் போது சுமார் 2 லட்சம் வரையில் கடன் வாங்கி கட்அவுட், பேனர் உள்ளிட்டவைகளுக்காக செலவு செய்துள்ளார். அதில் ஒன்றரை லட்சம் வரை கடனை அடைத்துள்ளார். மீதி பணம் கடனாக உள்ளது.
இது குறித்து விஜய் கூறுகையில், '' நடிகர் விஜய் திரையுலகத்திற்கு வந்து 28 ஆண்டுகள் முடிவடைந்ததையொட்டி ரசிகர்கள் மற்றும் மன்ற நிர்வாகிகள் முகம் தெரியாத பலருக்கும் ஆயிரக்கணக்கில் செலவு செய்து வருகின்றனர். ஆனால், நீண்ட காலமாக விஜய் மக்கள் இயக்கத்தில் உடன் பயணிக்கும் தொண்டனுக்கு தற்போது வரையில் நலத்திட்டமோ, உதவியோ செய்து தரவில்லை. ஆனால், எனது நிலை குறித்து நடிகர் விஜய் அறிந்தால் எனக்கு நிச்சயம் உதவி செய்வார் '' என்று நம்புகிறார்.