கேரளாவை சேர்ந்த அஞ்சு பாபி ஜார்ஜ். 2003-ம் ஆண்டு பாரிசில் நடந்த உலக தடகள போட்டியில், நீளம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீளம் தாண்டுதல் போட்டியில் கலந்து கொண்டு இந்தியாவுக்காக, தங்கப் பதக்கம் வென்றவர்.
தற்போது பெங்களூருவில் இளம் வீரர்களை உருவாக்குவதற்காக தன் கணவர் பாபி ஜார்ஜூடன் இணைந்து விளையாட்டு அகாடமி நடத்தி வருகிறார் அங்சு ஜார்ஜ். இந்த நிலையில், தன் வாழ்க்கையில் பல தடைகளை கடந்து இத்தகைய சாதனைகளை படைத்தேன் என்று அஞ்சு நேற்று தன் ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டிருந்த பதிவு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அஞ்சு வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,
‘நம்பினால் நம்புங்கள். நான் அதிர்ஷ்டசாலி. ஒரு கிட்னியை மட்டுமே வைத்துக்கொண்டு, சர்வதேச அளவில் சாதித்த சிலரில் நானும் ஒருவள். எனக்கு பெயின்கில்லர் என்றால் பயம், தொடக்க காலகட்டத்தில் காலில் பிரச்னை, பல கட்டுப்பாடுகள். இருந்தும் என்னால் சாதிக்க முடிந்தது. இதை எப்படிச் சொல்வது… பயிற்சியாளரின் மந்திரம் என்று சொல்வதா அல்லது திறமை என்று சொல்வதா என தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
உலக தடகள போட்டியில் பதக்கம் வென்ற ஒரே இந்திய தடகள வீராங்கனை அஞ்சு பாபி என்பது குறிப்பிடத்தக்கது. இவரின், கணவர் பாபி ஜார்ஜ்தான் அஞ்சுவுக்கு பயிற்சியாளர். கணவர் அளித்த உத்வேகத்தினால் ஒற்றை கிட்னியுடன் இத்தகையை இமாலய சாதனைகளை அஞ்சு படைத்துள்ளார் .
அஞ்சுவின் இந்த பதிவு விளையாட்டு உலகில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏராளமானோர் அஞ்சுவுக்கு பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர். விளையாட்டுத்துறை அமைச்சர் கிரென் ரிஜிஜு அஞ்சு தனது கடின உழைப்பு, திடமான றுதியின் மூலம் இந்தியாவுக்கு பல பெருமைகளை சேர்த்துள்ளார்'' என்று பாராட்டியுள்ளார்.