செங்கல்பட்டு மாவட்டம் சேலையூரில் காணாமல் போன தனது மகளை கண்டுபிடித்து தரவில்லை எனக்கூறி காவல் நிலையம் முன்பு பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த ஆட்டோ ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தாம்பரம் அடுத்த காமராஜபுரத்தை சேர்ந்த சீனிவாசன், தனது 13 வயது மகளை காணவில்லை என கடந்த 3-ம் தேதி சேலையூர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதன்பிற்கு புகார் குறித்து விசாரிக்க காவல் நிலையம் சென்ற போதும் போலீசார் ஆபாசமாக திட்டியதாக குற்றம்சாட்டி நேற்று மதியம் சேலையூர் காவல் நிலையம் முன் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்துக்கொண்டார்.
80 சதவிகித தீக்காயங்களுடன் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சீனிவாசன் புகார் அளித்த அன்றே அது குறித்து சேலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.