தமிழகத்தில், புயல் மற்றும் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகள் மேற்கொள்ள,11 அமைச்சர்களை நியமனம் செய்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் பாதிக்கப்பட்ட இடங்களில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப்பணிகள் மேற்கொள்ள 11 அமைச்சர்களை நியமித்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்படி, கடலூர் மாவட்டத்திற்கு, அமைச்சர்கள் தங்கமணி, எம்.சி.சம்பத்; திருவாரூர் மாவட்டத்திற்கு அன்பழகன், காமராஜ்; நாகப்பட்டினத்திற்கு வேலுமணி, ஓ.எஸ்.மணியன், விஜயபாஸ்கர்; செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு, செங்கோட்டையன், பெஞ்சமின்.
சென்னை மாவட்டத்திற்கு, ஜெயகுமார், பாண்டியராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் களமிறங்கி பணியாற்றவும்,மக்களுக்கு தேவையான உதவிகள் வழங்கி, மீட்பு மற்றும் நிவாரண பணிகளை முடுக்கி விடவும் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தாழ்வான பகுதிகளில், கடற்கரையோரங்களில், ஆற்றோரங்களில் வசிக்கும், 36 ஆயிரத்து, 986 பேர், 363 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார். பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், வீடு வீடாக சென்று, உணவு பொட்டலங்கள், குடிநீர், குழந்தைகளுக்கு தேவையான பால் பவுடர் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பாதிப்படைந்த பகுதிகளில், போர்க்கால அடிப்படையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு, இயல்பு நிலைக்கு திரும்ப, அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் அனைத்து துறை பணியாளர்கள், துரிதமாக பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.