சிதம்பரம் நடராஜர் கோயிலில் 800 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மழை நீர் வெளியேறும் சுரங்கப்பாதையை ஆய்வு செய்து வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.புரெவி புயலால் கனமழையால் கோயில் தெப்பக்குளமாகி போனது. கோயிலுக்குள் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்க முக்கிய காரணம் வடிவு கால்வாய்கள் அடைபட்டதே என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். கோயிலுக்கு அடியில் தண்ணீரை வெளியேற்றும் வகையில் மிகப் பெரிய சுரங்கப்பாதை அமைந்துள்ளது. சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த சுரங்கப்பாதை வழியாக கோயிலில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவுக்கு தண்ணீரை வெளியேற்றி விட முடியும்.
யானைக்கால் மண்டபத்தின் மேற்கு பகுதியில் தொடங்கும் நிலவறை கால்வாய் வழியாக தில்லை காளிக்கோயில் தெப்பகுளத்துக்கு தண்ணீரை கொண்டு சென்று அங்கிருந்து வடிகால் வாய்க்காலான தில்லையம்மன் ஓடைக்குச் செல்லும் வகையில் வடிகால் வசதி அரசர்கள் காலத்திலேயே செய்யப்பட்டுள்ளது. இந்த சுரங்க கால்வாயை அண்ணாமலைப்பல்கலைக்கழக பேராசிரியர்களும் ஆய்வு செய்துள்ளனர். நிலவறை கால்வாய் 1. 250 மீட்டர் நீளம் கொண்டது. தரை மட்டத்திலிருந்து 119 சென்டி மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்க கால்வாயின் உள்அளவு உயரம் 77 செ.மீ, அகலம் 63 செ.மீ ஆகும். நன்கு அரைக்கப்பட்ட களிமண்ணை கொண்டு உருவாக்கப்பட்ட சுட்ட செங்கற்களை பயன்படுத்தி இந்த சுரங்கப்பாதையை அமைத்துள்ளனர். பிற்கால சோழர்கள் காலத்தில் இந்த கால்வாய் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த கால்வாயை தூர்ந்து போய் கிடப்பதே கோயிலுக்குள் தண்ணீர் தேங்க காரணமென்று சொல்லப்படுகிறது.
இந்த கால்வாய் குறித்து வரலாற்று ஆய்வாளர் சிவராமகிருஷ்ணனிடத்தில் பேசிய போது, ''சிதம்பரம் வெள்ள பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதை புரிந்து கொண்டுதான் கோயில் கட்டுமானத்திலேவயே வாஸ்துப்படி கால்வாய் அமைத்துள்ளனர். 2014 ஆம் ஆண்டு தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த திருப்பாற்குளத்தை மீட்ட போதுதான் இந்த சுரங்க கால்வாயை நாங்கள் கண்டுபிடித்தோம். அதற்கு பிறகும், இந்த கால்வாயை தூர் வாரி முறையாக பராமரிக்கவில்லை. இதனால், 40 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடராஜர் கோயிலுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது '' என்கிறார்.