சிதம்பரம் பேருந்து நிலையம் அருகில் தொடர் மழை காரணமாக ஓடிய வெள்ளத்தில் ஒருவர் சோப்பு போட்டு உற்சாக குளியல் போடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது,
புரெவி புயல் காரணமாக கடலூர் மாவட்டம் முழுவதுமே பரவலாக கனமழை பெய்து வருகிறது. செம்பேரி, பெண்ணாடம், கோனூர் தரைபாலம், தொளார், மோலூர் தரைபாலம், திட்டக்குடி, நெடுங்குளம் தரைபாலம், மங்களூர், அடரி தரைபாலம், தீவளூர், சாத்துக்கூடல் தரைபாலம் உள்ளிட்ட 10- க்கும் மேற்பட்ட தரைபாலங்கள் மழை வெள்ளத்தில் முழ்கியுள்ளன. இதனால், 50- க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சொல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் தண்ணீர் முட்டளவுக்கு தேங்கி நிற்கிறது. கடலூர் மாவட்டத்திலுள்ள பல ஏரிகள், குளங்கள் நிரம் விட்டன. நெய்வேலியில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் என்எல்சி சுரங்கங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால், நிலக்கரி வெட்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
இப்படி, கடலூர் மக்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ள வேளையில், சாலையில் வெள்ளம் போல ஓடிய வெள்ள நீரில் ஒரு மனிதர் உற்சாக குளியல் போட்டது காமெடியாக அமைந்துள்ளது. கன மழை காரணமாக சிதம்பரம் பேருந்து நிலையம் முன்பு தண்ணீர் ஆறு போல ஓடுகிறது. இதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் தண்ணீரில் உற்சாகமாக குளியல் போட்டார். உடலுக்கு சோப்பு போட்டு குளித்ததோடு, தண்ணீரில் அவர் மூழ்கி மூழ்கி குளித்ததை கண்ட பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர். பேருந்து ஓடும் சாலையில் எதையும் பற்றி கவலைப்படாமல், குளித்து முடித்து தலையை துவைத்து கொண்டு அந்த மனிதர் அங்கிருந்து நகர்ந்தார். சாலை தண்ணீரில் அந்த மனிதர் குளியல் போடும் காட்சியை வீடியோவாக எடுத்த ஒருவர் அதை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.