ஜனவரியில் கட்சி துவங்க உள்ளதாகவும், அதற்கான தேதி இம்மாதம் 31-ல் அறிவிக்கப்படும் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம், இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை என்ற முழக்கத்தையும் அவர் முன்வைத்துள்ளார்.
கடந்த 30ந் தேதி மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய ரஜினி நேற்று வெளியிட்ட ட்வீட்டில், மாற்றுவோம் மாற்றுவோம் அனைத்தையும் மாற்றுவோம், இப்போது இல்லை என்றால், எப்போதும் இல்லை என பதிவிட்டிருந்தார். இதையடுத்து போயஸ் தோட்ட இல்லத்தில் ரஜினி செய்தியாளர்களை சந்தித்தார்.
மார்ச் மாதம் கூறியதை போல் மக்களிடம் எழுச்சியை ஏற்படுத்த தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால் கொரோனா காரணமாக தன்னால் மக்களை சந்திக்க முடியவில்லை என்று ரஜினி தெரிவித்தார்.
தமிழகத்தில் அரசியல் மாற்றம் மிக மிக முக்கியம் என்பதோடு மட்டும் அல்லாமல் கட்டாயம் என்பதால் கட்சி துவங்க உள்ளதாக ரஜினி தெரிவித்தார்.
இதனிடையே அரசியல் கட்சி துவங்க உள்ள ரஜினிக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மற்றும் அரசியல் , திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழருவி மணியனை மேற்பார்வையாளராகவும், அர்ஜூன மூர்த்தியை தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் நியமித்திருப்பதாக செய்தியாளர் சந்திப்பில் ரஜினி குறிப்பிட்டார்.