நாட்டின் சிறந்த 10 போலீஸ் நிலையங்களில் தமிழகத்தின் சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையம் 2-வது இடத்தைப்பிடித்து சாதனை புரிந்துள்ளது.
2015-ம் ஆண்டு குஜராத்தின் கட்ச் நகரில் நடந்த போலீஸ் மாநாட்டில், பிரதமர் மோடி, தேசிய அளவில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக செயல்படும் காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு கவுரவிக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
அதன்படி இந்த ஆண்டு 16,671 போலீஸ் நிலையங்கள் ஆய்வு செய்யப்பட்டு 10 சிறந்த போலீஸ் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப்பற்றிய விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்ற 55-வது டிஜிபி, ஐஜிபி போலீஸ் மாநாட்டில் இந்த அறிவிப்பு வெளியானது
அந்த அறிக்கையின்படி, மணிப்பூரில் தவுபால் மாவட்டத்தில் உள்ள நாக்போக் சேக்மாய் காவல்நிலையம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. நம் தமிழ் நாட்டின் சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையம் 2 வது இடத்தைப்பிடித்துள்ளது.
இந்த சிறந்த போலீஸ் நிலையங்களைத் தேர்வு செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன, அதன் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
போலீஸ் நிலையங்கள் குறித்த புள்ளிவிவரங்கள், நேரடி கண்காணிப்பு, பொது மக்களின் கருத்து ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டு இந்த 10 போலீஸ் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டன. குறிப்பாக சொத்துக்கள் தொடர்பான குற்றங்களை கையாளுதல், பெண்களுக்கு எதிரான குற்றம், நலிவடைந்தோருக்கு எதிரான குற்றங்கள், ஆட்கள் காணாமல் போதல், அடையாளம் தெரியாத உடல்கள், போன்ற குற்றங்களை எவ்வாறு கையாண்டார்கள் என்ற அடிப்படையில் தரவரிசை வழங்கப்பட்டது.
மக்களுக்கு எவ்வாறு போலீஸ் நிலையங்கள் சேவை செய்கின்றன, குற்றங்களைக் கண்டுபிடிக்க எவ்வாறு தொழில்நுட்பத்தை அதிகமாக பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்து 19 வகையான அளவுகோள் அடிப்படையில் போலீஸ் நிலையங்கள் தரம் பிரிக்கப்பட்டன.
இந்த செயல்திறன்கள் அடிப்படையில் 80 மதிப்பெண்களும் போலீஸ் நிலையத்தின் அடிப்படை கட்டமைப்பு வசதிகள், மக்களிடையே எவ்வாறு பழகுகிறார்கள், அணுகுகிறார்கள் என்ற அடிப்படையில் 20 மதிப்பெண்களும் வழங்கப்பட்டது.
அந்த வகையில் முதலிடத்தில் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள தவுபால் மாவட்டத்தில் உள்ள நாக்போக்சேக்மாய் காவல்நிலையத்துக்கு முதலிடம் வழங்கப்பட்டது.
2-வது இடம் தமிழகத்தில் சேலம் நகரில் உள்ள சூலமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு வழங்கப்பட்டது.
3-வது இடம் அருணாச்சலப்பிரதேசத்தில் சாங்லாங்கில் உள்ள கார்சாங் பிஎஸ் காவல் நிலையத்துக்கு வழங்கப்பட்டது.
தேசிய அளவில் சிறந்த செயல்பாட்டுக்காக தமிழ் நாட்டின் சேலம் சூரமங்கலம் மகளிர் காவல் நிலையம் 2 வது இடத்தைப்பிடித்திருப்பது பெருமைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.