புரெவிப் புயல் நாளை அதிகாலைக்குள் பாம்பனுக்கும் கன்னியாகுமரிக்கும் இடையே கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் தென்மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
புரெவிப் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மீட்புப் பணிகளுக்கு அனைத்துத் துறையினரும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் கால்வாய்க்கரைகளில் தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என நகராட்சி சார்பில் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் தேங்கும் நீரை அகற்ற மோட்டார்கள், சாய்ந்து விழும் மரங்களை வெட்டி அகற்றும் கருவிகள் என மீட்பு நிவாரணப் பகுதிகளுக்குத் தேவையான அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. ராமேஸ்வரம், பாம்பன் துறைமுகங்களில் மீனவர்கள் தங்கள் படகுகளை நங்கூரமிட்டுப் பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர். பாம்பன் சாலைப் பாலத்தின் மீது வேடிக்கை பார்க்க வந்த பொதுமக்களைக் காவல்துறையினர் திருப்பி அனுப்பினர்.
திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றுப் பகுதிகளையும், பாளையங்கால்வாயையும் மாவட்டச் சிறப்பு அதிகாரி கருணாகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இல்லை என்பதால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என அவர் தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டக் கடலோரப் பகுதிகளில் 10 ஊர்களைச் சேர்ந்த எட்டாயிரம் மீனவர்கள் 11 நாட்களாக மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் வாழ்வாதாரம் இழந்துள்ள தங்களுக்கு அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.