புரெவிப் புயல் காரணமாகத் தமிழகத்தின் உட்புற மாவட்டங்களிலும் வட மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
மதுரை மாநகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் நேற்றிரவு முதல் தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் பள்ளமான இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டுநர்கள் மெதுவாகச் செல்ல வேண்டியுள்ளது.
திண்டுக்கல், ஆத்தூர், நிலக்கோட்டை, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. கொடைக்கானலில் மழை காரணமாகப் பேருந்துப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
தேனி, சின்னமனூர், கம்பம், பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் மானாவாரிப் பயிர்கள் வளர்வதுடன் அதிக விளைச்சல் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு, கலவை, வாலாஜாபேட்டை, ஆரணி, அரக்கோணம், நெமிலி உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை 2 மணிமுதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.
புரெவிப் புயல் காரணமாகப் புதுச்சேரியிலும் காரைக்காலிலும் நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. புதுச்சேரியில் நேற்று ஒரேநாளில் 8 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
கரூர் மாவட்டத்தில் பரமத்தி, கடவூர், அரவக்குறிச்சி, குளித்தலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. விட்டுவிட்டு மழை பெய்வதால் சாலைகளிலும் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்து நிரம்பி வருவதால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நேற்றிரவு முதல் இன்று காலை வரை கனமழை பெய்தது. பகலிலும் தொடர்ந்து மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை மாநகரிலும் புறநகர்ப் பகுதிகளிலும் இன்று அதிகாலை முதல் காலை வரை பரவலாக மழை பெய்தது. பகலிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. தாம்பரத்திலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் அதிகாலை முதல் மிதமான மழை பெய்தது.