புரெவிப் புயல் பாம்பனுக்கும் கன்னியாகுமரிக்கும் இடையே நாளை அதிகாலைக்குள் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், புரெவிப் புயல் மணிக்கு 16 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து இன்று பிற்பகல் இரண்டரை மணி நிலவரப்படி பாம்பனுக்கு அருகிலும், கன்னியாகுமரிக்கு வடகிழக்கே 230 கிலோமீட்டர் தொலைவிலும் நிலவியதாகக் குறிப்பிட்டுள்ளது.
இந்தப் புயல் அடுத்த மூன்று மணி நேரத்தில் பாம்பன் பகுதியைக் கடக்கும் என்றும், இது மேற்கு தென்மேற்காக நகர்ந்து இன்று இரவு முதல் நாளை அதிகாலைக்குள் பாம்பனுக்கும் கன்னியாகுமரிக்கும் இடையே கரையைக் கடக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது. கரையைக் கடக்கும்போது மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் எனக் குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக இன்று இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யவும், ஒருசில இடங்களில் கனமழை முதல் மிகக்கனமழை பெய்யவும், ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்யவும் வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
நாளை தென்தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்யவும், ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிகக்கனமழை வரை பெய்யவும் வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. வட தமிழகத்திலும், புதுச்சேரியிலும் இன்று பல இடங்களில் மழை பெய்யவும், ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யவும் வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்தமிழகக் கடலோரம், தென்கேரளக் கடலோரம் ஆகிய பகுதிகளில் மணிக்கு 90 கிலோமீட்டர் வேகம் வரை காற்று வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் இன்றும் நாளையும் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது.
திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், திண்டுக்கல், அரியலூர், கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், நாகப்பட்டினம், ஈரோடு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மீது மேகக் கூட்டங்கள் காணப்படுவதால் இப்பகுதிகளில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.