கள்ளக்குறிச்சியில், 12 - ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு 10 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்த போலி டாக்டரை போலீசாரார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகேயுள்ளது லா.கூடலூர் கிராமத்தில் வருவாய் அலுவலர், சார் ஆட்சியர், வட்டாட்சியர் ஆகியோர் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவது தொடர்பாகப் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, முருகன் என்பவரது வீட்டில் மூதாட்டி ஒருவருக்கு குளுகோஸ் ஏறிக் கொண்டிருந்தது. இதை பார்த்த, அதிகாரிகள் என்ன ஏதுவென்று கேட்டுள்ளனர். அப்போது, உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவர் ஒருவர் வந்து குளுகோஸ் ஏற்றி சென்றதாக கூறினார்கள். தொடர்ந்து, யார் அந்த டாக்டர் என்று அதிகாரிகள் விசாரித்த போது, கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த கதிர்காமன் என்பவரின் மகன் இளையராஜா என்பவர் மூதாட்டிக்கு சிகிச்சையளித்து வந்தது தெரிய வந்தது. சந்தேகமடைந்த வருவாய்த்துறையினர் இளையராஜாவிடம் தீவிர விசாரணை செய்த போது அவர் போலி டாக்டர் என்பது தெரிய வந்தது.
மேலும், 12 - ம் வகுப்பு மட்டுமே படித்துள்ள இளையராஜா, கள்ளக்குறிச்சியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவம் பார்த்து வந்துள்ளார். அன்னை மெடிக்கல்ஸ் என்ற பெயரில் அல்லோபதி மருந்தகம் ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். அத்துடன் மருந்தகம் அருகேயுள்ள வீட்டை வாடகைக்கு எடுத்து, மருத்துவமும் பார்த்துள்ளார். இதையடுத்து, வருவாய்த்துறை அதிகாரிகள் ரிஷிவந்தியம் வட்டார அரசு மருத்துவர் ஜெயபாலிடம் இளையராஜாவை ஒப்படைத்தனர். அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த பகண்டை போலீசார் இளையராஜாவைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவர் நடத்திய மருந்தகத்துக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.