டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை பெரும் மழையும் புயலும் வீசக்கூடும் என்பதால், எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களில் மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.
இதையடுத்து உடனடியாக மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் சம்பந்தப்பட்ட கண்காணிப்பு அலுவலர்கள் முகாமிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அண்டை மாநிலத்தின் கடற்பகுதியில் மீன்பிடிக்க சென்றுள்ள தமிழ்நாட்டு மீனவர்கள் அந்தந்த மாநிலங்களின் கரையை அடைய அனுமதிக்குமாறு தொடர்புடைய மாநில அரசுகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் வசிக்கும் தாழ்வான பகுதிகளில் ஏற்படும் நீர் தேக்கத்தை உடனுக்குடன் வெளியேற்ற, பம்பு செட்டுகள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார்.
அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருவதால், பொதுமக்கள் புயல் குறித்து எந்தவித அச்சமும் அடையத் தேவையில்லை என்றும் அரசின் அறிவுரைகளுக்கு தகுந்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.